பட்டதாரி ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதி - டிடிவி தினகரன் ஆவேசம்!
Jan 28, 2025, 14:53 IST1738056233837

ஆசிரியர் தகுதி தேர்வை எதிர்பார்த்து லட்சக்கணக்கான இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் காத்திருக்கும் நிலையில், ஆண்டுக்கு இருமுறை நடத்த வேண்டிய தேர்வை ஒருமுறை கூட நடத்தாமல் காலம் தாழ்த்துவது பட்டதாரி ஆசிரியர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதி ஆகும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பை எதிர்பார்த்து லட்சக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த ஒன்றரை வருடமாக காத்திருப்பதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வு 2023 ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற நிலையில், அதன் பின் தற்போது வரை தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பைக் கூட வெளியிடாமல் காலம் தாழ்த்தி வரும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிகளின் படி ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட வேண்டிய ஆசிரியர் தகுதித் தேர்வை, ஒருமுறை கூட நடத்தாமல் காலம் தாழ்த்துவது, அத்தேர்வை எதிர்பார்த்து காத்திருக்கும் லட்சக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி ஆகும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிக்கு சேர முடியும் என்பதால், அத்தேர்வை நடத்துவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும் என இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எனவே, லட்சக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேதியை அறிவித்து தேர்வை நடத்துவதோடு, அத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு உடனடியாக பணி நியமன ஆணையையும் வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.