நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை...திமுக அரசின் அலட்சியமே காரணம் - டிடிவி தினகரன்

 
ttv dhinakaran

டெல்டா மாவட்டங்களில் தொடரும் கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி வரும் நிலையில், கால்வாய்களை முறையாக தூர்வாராமல் விவசாயிகளை துயரத்துக்குள்ளாக்கும் திமுக அரசின் அலட்சியப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் தொடர் கனமழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள தாளடி சாகுபடி பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நடப்பாண்டில் ஏற்கனவே காவிரி டெல்டா பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குறுவை மற்றும் சம்பா சாகுபடிகள் போதுமான பயனளிக்காத நிலையில், தற்போது ஏக்கருக்கு சுமார் 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்து தொடங்கிய தாளடி சாகுபடியும் நீரில் மூழ்கி அழுகும் நிலையில் இருப்பதால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். 


பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே தஞ்சை - நாகை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாய்காலை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கையை மாவட்ட நிர்வாகமும், வேளாண்மைத் துறையும் அலட்சியமாக எதிர்கொண்டதன் விளைவே, தற்போது  நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களில் மழைநீர் தேங்கி நெற்பயிர்கள் மூழ்க காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, கனமழை காரணமாக விளைநிலங்களில் தேங்கியிருக்கும் மழைநீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இனிவரும் காலங்களில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாத வகையில் பருவமழைக்கு முன்பாகவே கால்வாய்களை முறையாக தூர்வார வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.