திமுக அரசுக்கு ஒட்டுமொத்த மீனவர்களும் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - டிடிவி தினகரன்
Apr 2, 2025, 14:18 IST1743583682149

கச்சத்தீவை தாரைவார்த்த திமுகவே அதனை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை நிலைநாட்டிடவும், இலங்கை கடற்படையால் தமிழ்நாடு மீனவர்களுக்கு ஏற்படும் இன்னல்களை போக்கிடவும் கச்சத்தீவை திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தியும் முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தலுக்கு முன்பாக வாக்குறுதியளித்த திமுக, ஆட்சிக்கு வந்த நான்கு ஆண்டுகளில் தமிழக மீனவர்களை பாதுகாக்கவோ, கச்சத்தீவை மீட்கவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் பதவிக்காலம் நிறைவடையும் தருவாயில் சட்டப்பேரவையில் தீர்மானத்தை நிறைவேற்றுவது ஒட்டுமொத்த மீனவர்களையும் ஏமாற்றும் செயலாகும்.
1974 ஆம் ஆண்டு கச்சத்தீவு காவு கொடுக்கப்பட்டதை தடுக்க எதையுமே செய்யாமல் மவுனம் சாதித்த முன்னாள் முதலமைச்சர் திரு.கருணாநிதி அவர்கள், அதன் பின் மத்திய ஆட்சி அதிகாரத்தில் சுமார் 16 ஆண்டுகள் அங்கம் வகித்தும் கச்சத்தீவை திரும்பப் பெறுவதற்கான துரும்பைப் கூட கிள்ளிப்போடவில்லை என்பதை தமிழக மீனவர்கள் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள். தந்தை எவ்வழியோ தனயனும் அவ்வழி என்ற வரிகளுக்கு ஏற்ப கச்சத்தீவு தாரைவார்க்கும் போது திரு.கருணாநிதி அவர்கள் எவ்வாறு மவுனம் சாதித்தாரோ, அதைப் போலவே தமிழகத்தில் ஆட்சியிலிருக்கும் திமுக, கடந்த நான்கு ஆண்டுகளாக எதையுமே செய்யாமல் தற்போது கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்திருப்பது வாக்கு வங்கி அரசியலுக்காக தானே தவிர, தங்களின் மீதான உண்மையான அக்கறை அல்ல என்பதை தமிழக மீனவர்கள் அனைவரும் நன்கு அறிவர்.
எனவே, திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை மறைக்க தமிழக மீனவர்களை பகடைக்காயாக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, மீதமிருக்கும் ஓராண்டில் தமிழக மீனவர்களை பாதுகாத்திடவும், கச்சத்தீவை மீட்கவும் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.