24 மணி நேரமும் மதுவிற்பனை, பட்டித்தொட்டியெங்கும் போதைப்பொருள்- டிடிவி தினகரன் கண்டனம்

 
TTV STALIN

தமிழகத்தில் 24 மணி நேரமும் தங்குதடையின்றி இயங்கும் சட்டவிரோத தனியார் மதுபானக்கடைகள் மற்றும் பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் போதைப்பொருட்கள் விற்பனை  நடைபெற்றுவரும் நிலையில் திமுக அரசுக்கு மக்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ttv

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் தளத்தில், “திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே சட்டவிரோதமாக தனியார் மதுக்கடை ஒன்றில் காலை 8 மணி முதலே தங்கு தடையின்றி மதுபான விற்பனை நடைபெறுவது போல ஊடகங்களில் வெளியாகியிருக்கும் வீடியோ காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.  மேலும், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக சென்னை மாதவரத்தில் 16 கோடி ரூபாய் மதிப்பிலான மெத்தபெட்டமைன் எனும் கொடியவகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அதே மாதவரத்தில் பிடிபட்ட போதைப்பொருள் விற்பனை கும்பலிடமிருந்து  இருந்து 4 கிலோ போதைப் பொருளோடு 5 நாட்டுத்துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  

இப்படியாக, தமிழகத்தில் பொதுமக்கள் அதிகளவு கூடும் இடங்களில் நடைபெறும் சட்டவிரோத மதுபான விற்பனையால் பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தையும், பட்டிதொட்டியெங்கும் பரவியிருக்கும் கொடியவகை போதைப் பொருட்களின் தாராளப்புழக்கத்தால் ஏராளமான இளைஞர்களும் தங்களின் எதிர்காலத்தையும் தொலைத்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது. 

ttv

தமிழகத்தில் நாள்தோறும்  அரங்கேறும் கொலை, கொள்ளை, பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் போன்ற சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கு அடிப்படை காரணமான சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் போதைப்பொருட்களின் நடமாட்டத்தை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், போதையின் பாதையில் செல்ல வேண்டாம் என மன்றாடி கேட்டுக் கொள்வதாக விளம்பரத்தில் மட்டும் கோருவது எந்த வகையில் நியாயம் ? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். எனவே, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் மதுவிற்பனையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வருவதோடு, போதைப்பொருள் பறிமுதல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் விரிவான விசாரணை நடத்தி பின்னணியில் இருப்பவர்களையும் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.