பலாத்கார சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதா?- டிடிவி தினகரன்

 
ttv dhinakaran

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைச் சம்பவத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதா? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

anna

இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை பொதுவெளியில் வெளியானது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு புலனாய்வு குழு (SIT) முன்பாக ஆஜராகும் பத்திரிகையாளர்களை குற்றவாளிகளை போல நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுக்கு முரணாக வாட்ஸ் அப் மூலமாக சம்மன் அனுப்புவதோடு, விசாரணைக்கு ஒத்துழைக்கும் வகையில் ஆஜராகும் பத்திரிகையாளர்களின் செல்போன்களை பறிமுதல் செய்வதும், வழக்கிற்கு சிறிதளவும் சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு அவர்களை அச்சுறுத்துவதும் கடும் கண்டனத்திற்குரியது.

TTV Dhinakaran

பாதிக்கப்பட்ட மாணவி அளித்த புகாரின் படி பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை பாதுகாக்க வேண்டிய காவல்துறையே அதனை பொதுவெளியில் கசிய வைத்துவிட்டு, அப்பிரச்னையை மக்கள் மன்றத்திற்கு கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக நிற்கும் பத்திரிகையாளர்கள் மீது பழியை போட முயற்சிப்பதாக மூத்த பத்திரிகையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, விசாரணைக்கு ஆஜராகும் பத்திரிகையாளர்களை அச்சுறுத்துவதையும், அவர்களிடமிருந்து செல்போன்களை பறிமுதல் செய்வதையும் உடனடியாக நிறுத்துவதோடு, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை நேர்மையான முறையில் விசாரித்து உண்மைக் குற்றவாளிகளை கண்டறியத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சிறப்பு புலனாய்வுக் குழுவையும், தமிழக காவல்துறையையும் வலியுறுத்துகிறேன்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.