கள்ளக்குறிச்சியில் மீண்டும் கள்ளச்சாராய மரணம்- கள்ளச்சாரய வியாபாரிகளுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறதா?: டிடிவி தினகரன்

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்திய ஒருவர் உயிரிழந்த நிலையில், கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டிய காவல்துறையே அதனை ஊக்குவிப்பது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி தங்கராசு என்பவர் உயிரிழந்திருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. ஏற்கனவே, இதே கள்ளக்குறிச்சி பகுதியில் விற்கப்பட்ட கள்ளச்சாராயத்தை அருந்தி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் ஒருவர் உயிரிழந்திருக்கும் சம்பவம் கள்ளச்சாராய விற்பனையை தடுக்கவோ, ஒழிக்கவோ திமுக அரசு எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதையே உறுதிபடுத்துகிறது.
கள்ளச்சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி என்பவரை சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனையை பெற்றுத்தர தவறிய திமுக அரசின் அலட்சியப் போக்கே, தற்போது மேலும் ஒருவரின் உயிர் பறிபோக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் கைதான நபர் ஒருவர் ஜாமீனில் வெளிவந்து மீண்டும் அதே கள்ளச்சாராய தொழிலில் ஈடுபடுவது தெரியாத அளவிற்கு காவல்துறை செயலிழந்திருக்கிறதா ? அல்லது கள்ளச்சாரய வியாபாரிகளுக்கு ஆதரவாக காவல்துறை செயல்படுகிறதா ? எந்த சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து கள்ளச்சாராய வியாபாரிகள் யாராக இருந்தாலும், அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தகுந்த தண்டனை பெற்றுத்தருவதோடு, அவர்களுக்கு காவல்துறையினர் உடந்தையாக இருந்தது கண்டறியப்பட்டால் அவர்கள் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.