“அண்ணாமலையை கண்டால் திமுக நடுங்குகிறது... எதிரிகளுக்கு அவர் நெருப்பு”- டிடிவி தினகரன்

பாஜக சார்பில் புனித ரமலான் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூரில் நடைபெற்றது. இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மாநில துணை தலைவர் கரு. நாகராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன், உள்ளிட்டோரும், கூட்டணி கட்சி தலைவர்களான ரவி பச்சமுத்து , ஜான் பாண்டியன், ஏ.சி சண்முகம், டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம், பாமக பாலு உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், “தமிழ்நாட்டை ஆளும் திமுக அதன் தலைவர் ஸ்டாலின், மட்டும்தான் இஸ்லாமியரின் பாதுகாவலர் போல பேசுகிறார். பாஜகவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்படுவதை போல பொய்யான பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள் திமுக மற்றும் அதன் கூட்டணியினர். பாஜக கட்சி தலைவர்கள் நல்ல திறமையான மனிதரை பாஜக தலைவராக நியமித்துள்ளது. இன்றைக்கு திமுக, அண்ணாமலை என்றாலே நடுங்குகிற அளவுக்கு அவர் செயல்பாடுகள் இருக்கிறது. தொடர்ந்து அவர் செயல்பாடு இருக்கும். அண்ணாமலை எதிரிகளுக்கு தான் நெருப்பு... தமிழக மக்களுக்கு அவர் அகழ்விளக்கு. நண்பர்களுக்கு அவர் அண்ணாமலையார் தீபம்.. இஸ்லாமிய மக்களுக்கு 2026 தேர்தல் திருப்புமுனையாக அமையும். 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும் வரை ஓய மாட்டோம்” என்றார்.