“நான் தவெக கூட்டணிக்கு வருவேன் என செங்கோட்டையன் நம்பினார்... நான் தயங்கினேன்”- தினகரன்
ஜெயலலிதா ஆட்சி அமையவே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளேன் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “தவெகவுக்கு போவதற்கு 2 நாட்களுக்கு முன்பு கூட செங்கோட்டையன் என்னிடம் பேசிவிட்டுதான் சென்றார். நான் தவெக கூட்டணியில் வந்துவிடுவேன் என்று அவர் சொன்னதை மறுக்கவில்லை. நான் தவெக கூட்டணிக்கு வருவேன் என தவெக நிர்வாகி செங்கோட்டையன் நம்பினார். செங்கோட்டையனின் விருப்பத்தை மறுக்க முடியாமல் நான் தயக்கத்தில் இருந்தேன். பலமுறை நாங்கள் சந்தித்து பேசி இருக்கிறோம். செங்கோட்டையன் ஏன் தவெகவில் இணைந்தார் என டெல்லி தலைவர்களே என்னிடம் கேட்டனர். நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் எல்லாம் ஒரே குடும்பம் தான்.. இது அண்ணன் தம்பி சண்டை.. அ.தி.மு.கவினருடன் அ.ம.மு.கவினர் ஜெல் ஆகி விட்டார்கள். ஜெயலலிதா ஆட்சி அமைய நட்பு ரீதியாக NDA கூட்டணிக்கு நான் வர ஈபிஎஸ் விரும்பினார். ஜெயலலிதா ஆட்சி அமையவே அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளேன். அதிமுகவை ஊழல் கட்சி என்று சொல்லும் விஜய், அதிமுகவில் இருந்து வெளியில் வந்த செங்கோட்டையனை சேர்ந்துகொண்டுள்ளார். இது என்ன stand என எனக்குப் புரியவில்லை. விஜய்யின் நிலைப்பாடு என்ன என புரியவில்லை. விஜய் அ.தி.முக-வை ஊழல் கட்சி என விமர்சிப்பது தவறு.
NDAகூட்டணிக்கு பன்னீர்செல்வம் வர வேண்டும் என்பது என் விருப்பம். 3 முறை அதிமுக முதல்வர் எப்படி திமுகவுக்கு போவார்? NDA கூட்டணியில் இணைய யாரும் எனக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அழுத்தம் கொடுக்கவும் முடியாது. அதிமுக கூட்டணியில் அமமுக இணைவதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. செங்கோட்டையன் த.வெ.கவில் இணைந்த பின்னரும், அவரை மீண்டும் அழைத்துவர டெல்லியில் இருந்து சொன்னார்கள்” என்றார்.


