“பதவி வெறி, திமுகவுடன் ஒப்பந்தம்..வரும் தேர்தலில் அதிமுகவுக்கு மூடுவிழா”- எடப்பாடி பழனிசாமியை சாடிய தினகரன்

இரட்டை இலை திமுகவின் வெற்றிக்காக பயன்படுத்தப்படுகிறது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சிவகாசி அருகே திருத்தங்கலில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “திமுக அங்கம் வகித்த மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மத்திய ஆட்சியில்,ப. சிதம்பரம் அமைச்சராக இருந்தபோது மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் 2-3 தடவைகள் மட்டுமே குறிப்பிடப்பட்டு, மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியிலும் தமிழகத்தின் பெயர் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றதுடன், கடந்த 2021-ம் ஆண்டு மட்டும் ஒரு லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. மத்திய பட்ஜெட் என்பது நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்வதுதான். இதில் ஒரு மாநிலத்தை மட்டும் புறக்கணிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டை மத்திய பட்ஜெட்டில் மத்திய அரசு புறக்கணிப்பதாக கூறுவது மாநில அரசு தனது தவறை மறைக்க பொய்யான குற்றச்சாட்டாகும்.
2026 -ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு எதிரான கட்சிகள் தனியே நின்று தனது வாக்குகளை வீணடிக்காமல் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி தான் திமுகவுக்கு எதிரான ஒரு மாற்றுக் கட்சி. டங்ஸ்டன் திட்டத்தை தடுத்து நிறுத்தியது பாஜக தலைவர் அண்ணாமல. தமிழகத்தில் கேலிக்கூத்தான ஆட்சி நடந்து வருகிறது. சட்டமன்ற தேர்தலில் பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என திமுக நினைக்கிறது. தமிழகத்தில் யாருக்குமே பாதுகாப்பின்றி சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. குடும்ப அரசியல் நடத்தி வரும் திமுக அனைத்து துறைகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பாஜக மதவாத கட்சியல்ல. எடப்பாடி பழனிச்சாமி சுயநலத்துடன், பதவி வெறியால் தன் மீது ஏதும் வழக்குகள் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் திமுகவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளார். திமுக வெற்றி பெறவே தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி இரட்டை இலை சின்னத்தை தவறாக பயன்படுத்துவதுடன், தற்போதும் திமுக வெற்றிக்காக இரட்டை இலை பயன்படுத்தி வர படுகிறது. இனிமேலும் எடப்பாடி பழனிச்சாமியை நம்பி தொண்டர்கள் அவரது பின்னால் சென்றால் வருகிற 2026 தேர்தலில் ஜெயலலிதாவின் இயக்கத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி மூடு விழா நடத்தி விடுவார்” என்றார்.