சசிகலா , தினகரனின் திருவோணம் வாழ்த்து!

 
tn

திருவோணம் திருநாளையொட்டி சசிகலா, தினகரன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சசிகலா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாக திருவோணத் திருநாளை ஆண்டுதோறும் பாரம்பரியமாக கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.மகாபலி மன்னனின் அகந்தையை அழித்திட, திருமால், வாமனன் அவதாரம் பூண்டு மூன்றடி மண் கேட்க, முதல் அடியில் பூமியையும், இரண்டாம் அடியில் விண்ணையும் அளந்து, மூன்றாம் அடியை மகாபலி மன்னனின் தலையில் வைத்து பூமிக்குள் புதைக்கும் முன்பு, அம்மன்னனின் வேண்டுகோளை ஏற்று ஆண்டுதோறும் தனது நாட்டு மக்களை காண வரம் கொடுத்தார். அதன்படி மக்களை காண வரும் மகாபலி மன்னனை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோண நாளில் ஓணம் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Onam

மலையாள மொழி பேசும் மக்களால் ஆவணி மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரம் தொடங்கி பத்தாம் நாளான திருவோண நட்சத்திர நாள் வரை பத்து நாட்களும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின் போது, மக்கள் தங்கள் இல்லங்களின் முன்பு வண்ணப் பூக்களால் அழகுற அத்தப்பூ கோலங்கள் இட்டு, புத்தாடை உடுத்தி, அறுசுவை கொண்ட ஓணம் விருந்துண்டு, புலிக்களி, கைகொட்டுக்களி போன்ற நடனங்களை ஆடி, கயிறு இழுத்தல், களறி, படகுப் போட்டி போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தி உற்சாகமாக கொண்டாடி மகிழ்கின்றனர்.

திருவோணத் திருநாளான இந்நன்னாளில், போட்டி, பொறாமை, ஆணவம் அகன்று, பசி, பிணி, பகை நீங்கி, மக்கள் சமத்துவத்துடனும், சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி, இவ்வுலகெங்கிலும் வாழும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது நெஞ்சார்ந்த ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். 

ttv

அதேபோல் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " பொன் ஓணம் திருநாளைக் கொண்டாடும் மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.ஓணம் திருநாள் கேரள மக்களின் அறுவடைத் திருநாள் என்பதுமட்டுமின்றி, சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அனைவரும் கொண்டாடி மகிழும் நாள். நாடாளும் சக்கரவர்த்தியாக இருந்தாலும், ஆணவம் அழிவையே ஏற்படுத்தும் என்பதையும், எல்லோரையும் அன்போடு நேசித்து அரவணைப்பவரே மக்கள் மனங்களை வெல்ல முடியும் என்பதையும் மகாபலி சக்கரவர்த்தியின் வழியாக ஓணம் நமக்குச் சொல்லித் தருகிறது. இந்நன்னாளில் சாதி, மதங்களைக் கடந்து, அனைவரும் சகோதரர்களாக வாழ்வதற்கு உறுதியேற்போம். பேசுகிற மொழி வெவ்வேறாக இருந்தாலும், இந்தியர் என்ற உணர்வோடு ஒன்றுபட்டு நிற்போம். பொன் ஓணம் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், மன நிறைவையும் கொண்டு வந்து சேர்க்கிற திருநாளாக அமைய வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.