தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேட்டி: "திமுகவினர் வன்முறையில் ஈடுபடலாம்!"

 
W

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளரும், வில்லிவாக்கம் தொகுதி வேட்பாளருமான ஆதவ் அர்ஜுனா, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கை நேரில் சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தார்.

 

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாவது; தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கையின் போது சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக, அண்மையில் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள தவெக தேர்தல் பிரசார அலுவலகத்திற்கு தீ வைத்து நாசமாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அமைதியான ஓட்டு எண்ணிக்கையை கெடுக்கும் விதமாக, வன்முறை செயல்களில் ஈடுபட சமூக விரோதிகள் சதித்திட்டம் தீட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

எனவே, தமிழகத்தில் உள்ள 62 ஓட்டு எண்ணும் மையங்கள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும்.

ஓட்டு எண்ணும் மையங்களைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தூரத்திற்குப் பொது மக்கள் கூடுவதைத் தடுத்து, ஒரு பாதுகாப்பு வளையத்தை உருவாக்க வேண்டும்.

வேட்பாளர்கள் மற்றும் முகவர்களின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கைகள் அவசியம், இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம் பேசுகையில்,'தோல்வி பயம் காரணமாக திமுக எங்களை மிரட்டி வருகிறது. அனைத்து ஓட்டு எண்ணும் மையங்களில், அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட முகவர்களை மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும். ஓட்டு எண்ணும் மையங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களை கேட்டு, திமுகவினர் வன்முறையில் ஈடுபடலாம்.

ஓட்டு எண்ணிக்கை நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும்.

மேலும், ஸ்ரீரங்கத்தில் தவெக அலுவலகத்திற்கு தீவைத்த நபரை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்,'

இவ்வாறு அவர் கூறினார்.