ஹெல்மெட் அணியாத லாரி ஓட்டுநருக்கு ரூ.500 அபராதம்..!

 
1

இந்தியாவில் நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப மேம்பாலங்கள் கட்டுதல், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சாலையை விரிவுபடுத்துதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன் போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்லுதல், அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், பைக் ரேஸில் ஈடுபடுதல் உள்ளிட்டவற்றுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. டூவீலரில் ஹெல்மெட் அணியாவிட்டால் 2,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.இந்த நிலையில் ஹெல்மெட் அணியாத டிப்பர் லாரி ஓட்டுநருக்கு ரூ.500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம், கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர கன்னட மாவட்டம், ஹொன்னவரில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து வீதிமீறியதாக டிப்பர் லாரி ஓட்டுநருக்கு 500 ரூபாயை போக்குவரத்து போலீஸார் அபராதம் விதித்துள்ளனர். இந்த அபராதம் விதிக்கப்பட்ட ரசீது, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. ஹொன்னாவரைச் சேர்ந்த வினுதா வனோத் நாயக்கா என்பவருக்குச் சொந்தமான டிப்பர் லாரியை சந்திரகாந்தா என்ற ஓட்டுநர் ஓட்டி வருகிறார். அவர் சீருடை அணியாமல் வாகனம் ஓட்டிச் சென்றதைக் கண்ட போக்குவரத்து போலீஸார், அந்த வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், ஹெல்மெட் அணியாததற்கான ரசீது சந்திராகாந்தாவிற்கு வழங்கப்பட்டு 500 ரூபாய் அவரிடம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ரசீதைப் பார்த்த டிப்பர் லாரி ஓட்டுநர் வாயடைத்துப் போனார். அபராதம் விதிக்கும் போது சீருடைக்குப் பதிலாக ஹெல்மெட் என்று தேர்வு செய்யப்பட்டதே இந்த குழப்பத்திற்குக் காரணம் என போக்குவரத்து போலீஸார் காரணம் சொல்லியுள்ளனர். இந்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.