நடுவானில் கோளாறு..!! மதுரையிலிருந்து துபாய் புறப்பட்ட விமானம் சென்னையில் அவசரமாக தரையிறக்கம்..!

 
Q Q
மதுரை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் (Spice Jet Airlines) பயணிகள் விமானம் நேற்று மதியம் வழக்கம் போல் புறப்பட்டது. இதில், 167 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 173 பேர் இருந்தனர். விமானம் புறப்பட்டு நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது, விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.
இதனை அறிந்த விமானி, உடனடியாக மதுரை மற்றும் சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அந்த சமயத்தில், விமானம் சென்னை வான்வெளியில் பறந்து கொண்டிருந்ததால், சென்னையில் தரையிறங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதன்படி, அந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
பின்னர், விமானம் நடைமேடைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதில் பொறியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து, இயந்திர கோளாறை சரிசெய்யும் பணியில் விமானப் பொறியாளர் குழு ஈடுபட்டது. எனினும், பழுதை சரிசெய்ய நீண்ட நேரமானதால் பயணிகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டது.
இறுதியாக சுமார் 8 மணிநேரத்திற்கு பிறகு, இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு 173 பயணிகளுடன் விமானம், இரவு சென்னையில் இருந்து துபாய் புறப்பட்டு சென்றது