திருச்சி- சென்னை மட்டுமே தேஜஸ் ரயில்
மதுரை தேஜஸ் ரயில் பகுதியளவு ரத்து செய்யப்பட்டிருப்பதாக ரயில்வே மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது.

சென்னையிலிருந்து மதுரைக்கு வெறும் 6 மணி 30 நிமிடங்களில், சென்றடையும் அதிவேக ரயிலான தேஜஸ் ரயில் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டது. அதிநவீன வசதிகளுடன் இயக்கப்பட்டுவரும் இந்த ரயில், பயணிகளிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை எழும்பூர் – மதுரை இடையே இயக்கப்பட்டு வரும் தேஜஸ் விரைவு ரயில், தாம்பரம், திருச்சி, திண்டுக்கல் ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும்.
இந்நிலையில் திருச்சி பகுதியில் கட்டுமானப்பணிகள் காரணமாக வரும் 11 மற்றும் 12ம் தேதிகளில் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வரும் 12ம் தேதி சென்னை - மதுரை தேஜஸ் விரைவு ரயில் திருச்சி வரையே செல்லும், அதேநாளில் மறுமார்க்கமாக செல்லும் அந்த ரயில் திருச்சியில் இருந்தே சென்னை புறப்படும். தாமரைப்பட்டி- வடமதுரை இடையே ரயில்வே சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது.


