“உலகமே தமிழ்நாட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது”- அன்பில் மகேஷ்காக கமல்ஹாசன் தீவிர பரப்புரை

 
s

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஷை ஆதரித்து அரியமங்கலம் பகுதியில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார்.

 

அப்போது பேசிய கமல்ஹாசன், “உலகமே தமிழ்நாட்டை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்தியா என்கிற நாடு பல விஷயங்களில் சரிந்து கொண்டிருக்கும் பொழுது எப்படி ஒரு மாநிலம் மட்டும் எப்படி ஒரு மாநில மட்டும் நட்சத்திரமாக மின்னுகிறது என்பதை உலக நாடுகள் கவனிக்க தொடங்கியுள்ளார்கள். பொருளாதாரத்தில் இந்தியா சரிந்து ஆறாவது இடத்தில் இருக்கிறது. அதை முன்னுக்கு எடுத்துச் செல்லக்கூடிய ஒரு சில மாநிலங்களில் முக்கிய இடத்தை தமிழ்நாடு வகிக்கிறது. பெண்களுக்கு கல்வி கிடைக்குமா? கிடைக்காதா? என ஏங்கி இருந்த காலம் இருந்தது. இன்று பெண்கள் கல்வி கற்பவர்கள் 34 சதவீதம் அதிகம் அடைந்துள்ளார்கள். இது வேறு எங்கும் நடப்பது போல் தெரியவில்லை. நான்தான் முதல்வன், நான் சொல்வதை தான் கேட்க வேண்டும் என இல்லாமல் நீங்களும் முதல்வராகலாம் என நான் முதல்வன் திட்டத்தை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். அவரின் பெருந்தன்மையின் காரணமாக தான் 15 கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ளது.

திருச்சியில் ஒலிம்பிக் அகாடமி கட்டப்பட்டு வருகிறது. திருச்சியிலிருந்து செல்லும் வீரர்கள் பதக்கங்களை அள்ளி செல்லும் நாள் வெகு தூரம் இல்லை. டெல்லியில் இருப்பவர்கள் கூட்டி தருகிறோம் எனக் கூறி குறைத்து தருகிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சி அவர்களுக்கு வயிற்று எரிச்சல் தான். அதற்கு மோர் குடித்து பார்த்தார்கள், மருந்து குடித்துப் பார்த்தார்கள், ஆனால் சரிவரவில்லை. அதனால் தற்போது அவர்களுக்கு கோபம் அதிகம் அடைந்துள்ளது. நாங்கள் சொல்வதை செய்தால் தான் உங்களுக்காக நிதி ஒதுக்குவோம் எனக் கூறுகிறார்கள். தமிழ்நாட்டிற்கான நிதியை ஒதுக்காமல் பிளாக்மெயில் செய்கிறார்கள். 3000 கோடி ரூபாய் பணத்தை பிடித்து வைத்துக் கொண்டு முன்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொள்ள தர்மேந்திர பிரதான் கூறுகிறார். தமிழ்நாடு மொழி திணிப்பை எப்படி குமட்டி துப்பும் என்பதை தர்மேந்திர பிரதான் மறந்து விட்டார். தமிழ்நாட்டிற்கு தனி கல்விக் கொள்கை உருவாக்கியவர் அன்பில் மகேஷ். அன்பில் மகேஷ் செய்த செயல்கள் எல்லாம் நான் கனவில் நினைத்ததை அவர் செய்திருக்கிறார்” என்றார்.