"தமிழக பெண் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கின்றார்"- திருச்சி சிவா

ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல் நாமக்கல்லில் மோகனூர் சாலையில் உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா, ராஜேஸ்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய திருச்சி சிவா எம்.பி, “நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் எவ்வளவு வலிமையாக, நியாயமான கோரிக்கை வைத்தாலும் அவையை நடத்துகின்ற தலைவர்கள் ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுகின்றனர். குடியரசு தலைவர் உரையில் எதிர்காலத்தில் என்ன செய்வோம் என்ற திட்டங்கள் இல்லை, கடந்த கால அரசியல்கள் குறித்து தெரிவித்தார்கள், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரல்கள் நாள்தோறும் ஓங்கி ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.
எங்களுடைய உரையை அமைதியாக கேட்பார்கள். அரசாங்கத்தை விமர்சிக்கின்றீர்கள், ஆனால் முறையாக விமர்சனம் செய்கிறீர்கள் என திமுகவை ஆளும் கட்சியினர் பாராட்டுகின்றனர். நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த நிர்மலா சீதாராமன் அவர்களிடம் என்ன கேட்டோம். தமிழ்நாட்டுப் பெண் தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைக்கின்றார், மதுரையில் பிறந்து விழுப்புரம், திருச்சியில் படிப்பை முடித்து வேறு மாநிலத்தில் திருமணம் ஆனாலும் வேர் என்பது தமிழ்நாடு. தேர்தல் நேரத்தில் நான் உங்கள் மாநிலத்தை சேர்ந்த பெண் என பேசினார், என்ன தான் கட்சியின் அணுகுமுறை ஒன்றாக இருந்தாலும், நிதி நிலையில் அணுகுமுறை இல்லை. கைநீட்டி யாசகம் கேட்கவில்லை தமிழ்நாட்டிற்கு உரிய பங்கீடு தான் வேண்டுமென என உரிமையோடு கேட்கின்றோம். தமிழ்நாடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்படாத பீகார் மாநிலத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.