திருச்சி: அமேசானில் சைனீஸ் நூடுல்ஸ் வாங்கி சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு..
திருச்சியில் அமேசானில் சைனீஸ் நூடுல்ஸ் வாங்கி சமைத்து சாப்பிட்ட 15 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியால் எல்லாம் விரல் நுனியில் என்பது போல ஷாப்பிங்கும் மிக எளிமையாகிவிட்டது. நமக்கு தேவையான ஒரு பொருள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், ஆன்லைனில் ஆர்டர் செய்து தற்போது பெற்றுக்கொள்ள முடிகிறது. உணவு, மளிகை, வீட்டு உபயோக பொருட்கள், ஆடைகள், மருந்து பொருட்கள் என அனைத்தும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும், டோர் டெலிவரி செய்யப்பட்டு விடுகிறது. இதன்மூலம் வெளிநாடுகளின் உணவு கலாச்சாரம் நம் ஊரில் சாதாரணமாக பழக்கத்திற்கு வந்துவிட்டது.
அதில் ஒன்றுதான் நூடுல்ஸ். குழந்தைகளை எளிதாக கவர்ந்துவிடும் நூடுல்ஸ் விற்பனையும் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அமேசான் தளத்தில் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸ் சமைத்து சாப்பிட்ட 15 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அடுத்த அரியமங்கலத்தைச் சேர்ந்தவர் ஜான் ஜூடி மெயில்ஸ். இவரது மகள் ஸ்டெபி ஜாக்குலின் திருச்சியில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமி ஸ்டெபிக்கு நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும் என்பதால், கடையில் வாங்கியோ அல்லது வீட்டில் சமைத்தோ சாப்பிடும் பழக்கம் கொண்டிருக்கிறார். அந்தவகையில் நேற்று வழக்கம்போல் நூடுல்ஸ் சாப்பிட ஆசைப்பட்டு, அமேசானில் சைனீஸ் புல்டாக் நூடுல்ஸ் ஆர்டர் செய்திருக்கிறார். அதனை சமைத்து சாப்பிட்டுவிட்டு இரவு படுத்து தூங்கியுள்ளார். ஆனால் காலையில் நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்காததால், குடும்பத்தினர் எழுப்ப முயன்றுள்ளனர்.
ஆனால் சிறுமி அப்போது எழாததால், அவர் உயிரிழந்தது தெரியவந்தது, இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னரே சிறுமி உயிரிழப்புக்கான உண்மையான காரணம் தெரியவரும் என போலீஸார் கூறியுள்ளனர். இந்த நிலையில், சைனா நூடுல்ஸ் மொத்த விற்பனையாளரிடம் இருந்து காலாவதியான 800 கிலோ உணவுப் பொருட்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.