“இத்தோட நிறுத்திக்கோங்க... இதுக்குலாம் அஞ்சுற ஆள் இல்ல” - திண்டுக்கல் லியோனி

 
க்ஷ்

சலசலப்புக்கு அஞ்ச மாட்டேன் என பிரச்சாரத்தின் போது தன் மீது பாட்டில் வீசப்பட்ட விவகாரம் குறித்து திண்டுக்கல் லியோனி வீடியோ வெளியிட்டுள்ளார்.

திருச்சி கிழக்கு தொகுதிக்குட்பட்ட கீழப்புதூர் பகுதியில் கிழக்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் இனிகோ இருதயராஜ்க்கு ஆதரவாக நேற்று இரவு திண்டுக்கல் லியோனி பிரச்சாரம் மேற்கொண்டு இருந்தார். அப்பொழுது மர்ம நபர்கள் அவரை நோக்கி காலி மது பாட்டிலை வீசியுள்ளனர். அந்த பாட்டில் வேனில் பட்டு உடைந்தது நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த நிலையில் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ள திண்டுக்கல் லியோனி, “நான் கடந்த 16 நாட்களாக திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறேன். திருச்சி கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த பொழுது சிலர் என்மீது பாட்டில் வீசி உள்ளனர். எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தின் காரணமாக செய்த அநாகரிகமான செயல் தான் இது. இதுபோன்ற சலசலப்புக்கு நானும் நான் சார்ந்து இருக்கக்கூடிய திமுகவோ ஒருபோதும் அஞ்ச மாட்டோம். இனிமேல் தான் என்னுடைய பிரச்சாரம் இன்னும் வீரியமாக இருக்கும். இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் எதிர்க்கட்சிகள் ஈடுபடுவது இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.


இதனிடைய இந்த விவகாரம் தொடர்பாக வன்முறை செய்தல், ஆயுதங்களுடன் வன்முறையில் ஈடுபடுதல், ஒருவரை தாக்கி காயம் ஏற்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத ஐந்து பேர் மீது பாலக்கரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.