பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்கிறார், மன் கீ பாத்தில் பேசுகிறார் ஆனால் நாடாளுமன்றம் வருவதில்லை”- திருச்சி சிவா

 
 திருச்சி சிவா எம்.பி.  திருச்சி சிவா எம்.பி.

பஹல்காம் தாக்கல் - ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் போது கூட பிரதமர் மோடி அவைக்கு வர வில்லை என திமுக மாநிலங்களவை குழு  தலைவர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார்.

மாநிலங்களவையில் உரையாற்றிய திமுக எம்பி திருச்சி சிவா, “பஹல்காம் தாக்குதல் - ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் போது கூட பிரதமர் மோடி அவைக்கு வரவில்லை. நாடாளுமன்றத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதை ஆளும் பாஜக அரசு பழகிக் கொள்ள வேண்டும். அனைத்து கட்சிக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்பதே இல்லை. பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு செல்கிறார்.மன் கீ பாத்தில் பேசுகிறார். ஆனால் நாடாளுமன்றம் வருவதில்லை. 

உளவுத்துறை எச்சரிக்கையால் ஏப்.22 பிரதமர் மோடியின் காஷ்மிர் பயணம் ரத்து செய்யப்பட்டது. உளவுத்துறை எச்சரிக்கை செய்திருந்தும் பஹல்காமில் தாக்குதல் நடந்தது எப்படி? ஏப்ரல் 26 அன்று காஷ்மீரில் அப்பாவு சுற்றுலாப் பயணிகள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகள் தாக்குதல் நடந்த 40 நிமிடமும் ஒரு பாதுகாப்பு வீரர் கூட அந்த இடத்துக்கு வரவில்லை. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்குள்ள பாதுகாப்பு டெல்லிக்கு மாற்றப்பட்டுவிட்டது. ஆகவே ஜம்மு காஷ்மீரின் பாதுகாப்புக்கு ஒன்றிய அரசே பொறுப்பு. மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை நடாளுமன்றத்துக்கு உண்டு. ஆனால் நாடாளுமன்றத்தை முடக்குவதாக எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டுகின்றனர். எதிர்க்கட்சி தலைவர் பேசும்போது, ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையூறு செய்கின்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பும் எந்த கேள்விக்கும் ஆளும் கட்சி அமைச்சர்கள் பதில் அளிப்பது இல்லை. நாடாளுமன்றமே ஜனநாயகம் இல்லாமல் போய்விட்டது” என்றார்.