உலகின் மிக பெரிய தேசிய கொடிக்கு மரியாதை..!
குஜராத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள தோர்தோ (Dhordo) கிராமத்தில், காதித் துணியால் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக் கொடி மிகப்பிரம்மாண்டமாகக் காட்சிப்படுத்தப்பட்டது. தேசத்தின் பெருமையை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கைகளில் தேசியக் கொடியை ஏந்தி தேசப்பற்றை வெளிப்படுத்தினர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் (KVIC) மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது. கைத்தறியால் நெய்யப்பட்ட இந்த பிரம்மாண்ட மூவர்ணக் கொடி, இந்தியாவின் பாரம்பரியக் கலைக்கும் நெசவாளர்களின் உழைப்பிற்கும் அளிக்கப்பட்ட மிகப்பெரிய கௌரவமாகக் கருதப்படுகிறது.
சுயசார்பு இந்தியாவின் (Atmanirbhar Bharat) மனவுறுதி மற்றும் கலாசாரச் செறிவின் அடையாளமாகத் திகழும் இந்தத் தேசியக் கொடி, ரான் ஆஃப் கட்ச் (Rann of Kutch) வெள்ளை மணல் பரப்பில் கம்பீரமாக விரிந்து தேசத்தின் ஒருமைப்பாட்டைப் பிரதிபலித்தது. இந்தியாவின் வீரத்தையும் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் அமைந்த இந்த நிகழ்வு, இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகப் பதிவாகியுள்ளது.


