கடலூர் அரசு மருத்துவமனை ஐசியூவில் மின்சாரமின்றி சிகிச்சை
கடலூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு மற்றும் ஐசியு வார்டில் 2 மணி நேரமாக மின்சாரம் இல்லாமல் நோயாளிகள் அவதிக்குள்ளாகினர்.

கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான வெளிப்புற நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் . 500க்கும் மேற்பட்ட உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, ஐ சி யு வார்டு, பெண்கள் வார்டு, மகப்பேறு பிரிவு என பல்வேறு சிகிச்சைகளுக்கு தனித்தனியாக கட்டிடங்கள் அமைந்துள்ளது. இந்த நிலையில் மாலை 6 மணிக்கு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள எமர்ஜென்சி ஐ சி யூ வார்டு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு வார்டு இரண்டிலும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. சுமார் 2 மணி நேரமாக மின்சாரம் இல்லாததால் எமர்ஜென்சி& ஐசியூ வார்டு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு வார்டு பகுதியில் உள்ள நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
இந்த பகுதியில் அண்டர் கிரவுண்டில் செல்லும் கேபிள் துண்டிக்கப்பட்டதால் மின்சாரம் தடைபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் டார்ச் லைட் அடித்துக்கொண்டு சிகிச்சை அளித்து வருகின்றனர். மின்சார வசதி இல்லாமல் இதய நோயால் சுவாச நோயால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மின்சார தடையை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் அவசரமாக ஈடுபட்டு சரி செய்து வருகின்றனர். விரைவில் மின்சாரம் கொடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .இருந்தாலும் அரசு மருத்துவமனையில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் இல்லாமல் நோயாளிகள் அவதி அடைத்து வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

