ராகுலுக்கு டீ வாங்கி கொடுக்கும் டிராவல் ஏஜெண்ட் மாணிக்கம் தாகூர்! காங்கிரஸை கடுமையாகச் சாடிய அண்ணாமலை
வீ தி லீடர்ஸ் அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை அளித்த பேட்டி: அரசு மாறியிருந்தாலும், நிலைமை இன்னும் மாறவில்லை என்பதைத் தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு திமுக அரசு அனுமதிக்கவில்லை. நவம்பர் 20 அன்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், கார்த்திகை தீபத்தன்று திருப்பரங்குன்றத்தில் தற்காலிகமாக தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது; இதனைச் செயல்படுத்த மதுரை மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்பட்டதுடன், தேவைப்பட்டால் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரை பணியமர்த்தவும் அறிவுறுத்தப்பட்டது.
தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைப் புரிந்துகொள்ளாமல், மீண்டும் நீதிமன்றத்தை நாடியுள்ள இந்த அரசின் நோக்கம் குறித்து எங்களுக்குச் சந்தேகம் எழுகிறது. உச்ச நீதிமன்றம் சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதே விவகாரத்தில் நீதிபதிக்கு எதிராக 150 பார்லிமென்ட் எம்பிக்களை கொண்டு கண்டனத் தீர்மானம் கொண்டுவர திமுக முயற்சித்தது.
நாளை, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற இந்த அரசு அனுமதிக்கவில்லை என்றால், அது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான செயலாக அமையும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பை இந்த அரசு செயல்படுத்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். அரசு அதிகாரிகள் நாளை திருப்பரங்குன்றத்திற்குச் சென்று தீபம் ஏற்ற வேண்டும். மத நல்லிணக்கத்தை சீர்குலைப்பதே தமிழக அரசு தான். உத்தரவை நிறைவேற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வரும். 100 ஆண்டுகளுக்கு முன்பு என்ன நடந்ததோ, அதையே கொண்டு வாருங்கள்.
தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கலெக்டரின் கணவர் புகாரளித்தாரா இல்லையா? நாளைக்குள் இந்த பிரச்னையில் நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். தமிழகத்தில் 1 சதவீத ஓட்டு கூட இல்லாத கட்சி காங்கிரஸ். ராகுலுக்கு டீ, காபி வாங்கி கொடுக்க விஜய் வீட்டுக்கு அழைத்து செல்லும் டிராவல் ஏஜெண்ட் தான் காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

