"துரோகி சத்யபாமா" - தாராபுரத்தில் நள்ளிரவில் ஒட்டப்பட்ட சர்ச்சை போஸ்டர்கள்!
திருப்பூர் தாராபுரம் தொகுதியில் அ.தி.மு.க தரப்பில் பேட்டியிட்டு வெற்றி பெற்றவர் சத்யபாமா.எஸ்.பி வேலுமணி அணியில் இடம்பெறுவதாக ஆதரவு அளித்து வந்த நிலையில், திடீரென தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரைச் சந்தித்து கடிதம் கொடுத்தார்.
அதே கையோடு த.வெ.க- வில் இணைந்தார்.
இந்த நிலையில், 'தாராபுரம் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க தொண்டர்களின் வியர்வை சிந்திய உழைப்பில் வெற்றி பெற்று, MLA-ஆகி தற்போது TVK-வின் குதிரை பேரத்திற்கு விலைபோன துரோகி சத்தியபாமாவை வன்மையாகக் கண்டிக்கிறோம்' என தாராபுரம் தொகுதியின் பல இடங்களிலும் அ.தி.மு.க தாராபுரம் சட்டமன்றத் தொகுதி என்கிற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வரும் நிலையில், அவருக்கு எதிரான இந்தச் சுவர் விளம்பரங்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன.
இந்த நிலையில் “குதிரைபேரத்தில் ஈடுபட வேண்டிய அவசியமே இல்லை; தவெகவில் அப்படி எதுவும் நடக்கவில்லை என சத்யபாமா விளக்கம் அளித்துள்ளார்.
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து அதிமுக கட்சியிலிருந்து ஒரு ரூபாய் கூட பெறவில்லை என்றும், நன்கொடையாகக் கூட எந்த தொகையையும் வாங்காமல் தனது சொந்த பணத்தில் தேர்தலில் போட்டியிட்டதாகவும், அதனால் குதிரைபேர அரசியலில் ஈடுபட வேண்டிய அவசியமே இல்லை என்றும், எம்எல்ஏ பதவியிலிருந்து விலகி தவெகவில் இணைந்த சத்யபாமா தெரிவித்துள்ளார். மேலும், தவெகவில் எந்தவித குதிரைபேரமும் நடைபெறவில்லை என்றும், ஆட்சியை இழிவுபடுத்தும் நோக்கில் மட்டுமே சிலர் இவ்வாறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசுகின்றனர் என்றும் அவர் பேட்டியளித்துள்ளார்.

