ரயில் டிக்கெட் முன்பதிவு : கால அவகாசம் 60 நாட்களாக குறைப்பு..!!
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டிருப்பது பயணிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
தொலைதூர பயணங்களுக்கு மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொதுப்போக்குவரத்தில் ரயில் போக்குவரத்து முக்கியமான ஒன்று. நாள்தோறும் நாடு முழுவதில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் வழக்கத்தைவிட கூடுதலான மக்கள் பயணம் செய்வர். கல்வி, வேலைக்காரணமாக வெளியூர்கலில் தங்கியிருக்கும் மக்கள், சொந்த ஊர்களுக்கு ஒரே நேரத்தில் செல்ல விரும்புவதே இதற்கு காரணம். இதனால் பலர் இடம் கிடைக்காமலும், கூட்ட நெரிசலிலும் தவிக்கும் நிலை ஏற்படும்.
இதன் காரணமாக பொதுமக்கள் வசதிக்காகவும், பண்டிகை காலங்களில் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கவும், 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படும். ஆனால் தற்போது டிக்கெட் முன்பதிவுக்கான கால அவகாசத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்து ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு நவம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வர இருப்பதாகவும், ஆகையால் தற்போது வரை முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகத்தின் இந்த அறிவிப்பு, பயணிகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.