ரயில் பயணிகள் ஷாக்..! திடீரென பாம்பன் ரயில் பாலத்தில் இருந்து குதித்த இளம்பெண்..!

 
1

பாம்பன் ரயில்வே பாலத்தை ரயில்கள் கடக்கும்போது, ஓடும் ரயிலிலிருந்து பயணிகள் கடலில் குதித்த இரண்டு வெவ்வேறு சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பயணிகளின் பாதுகாப்பு குறித்த கேள்விகளையும் எழுப்பியுள்ளன. சனிக்கிழமை இரவு கடலில் குதித்த இளைஞர் உயிரிழந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை மற்றொரு ரயிலிலிருந்து குதித்த பெண் பயணி பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முதல் சம்பவத்தில், சனிக்கிழமை இரவு ராமேஸ்வரத்திலிருந்து மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பாம்பன் கடல் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தபோது, அதிலிருந்த இளைஞர் ஒருவர் திடீரென கடலில் குதித்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அளித்த தகவலின் பேரில், ரயில்வே போலீசார் உடனடியாகத் தேடுதல் பணியை தொடங்கினர். இருப்பினும், ஞாயிற்றுக்கிழமை காலை பாம்பனுக்கு அருகிலுள்ள முள்ளிமுனைத் தீவு கடற்கரையில் அந்த இளைஞரின் சடலம் கரை ஒதுங்கியது. கடலோர காவல்படை போலீசார் உடலை கைப்பற்றி, உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, மற்றொரு சம்பவமாக ஞாயிற்றுக்கிழமை காலை கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்து கொண்டிருந்த அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் பாம்பன் பாலத்தைக் கடந்தபோது, அதிலிருந்த பெண் பயணி ஒருவர் திடீரென கடலில் குதித்தார். இதில் அவருக்குப் பலத்த காயங்கள் ஏற்பட்டன. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே காவல் ஆய்வாளர் கதிர்வேல் தலைமையிலான போலீஸ் குழுவினர், கடலில் தத்தளித்த அப்பெண்ணை உயிருடன் மீட்டனர்.

மீட்கப்பட்ட பெண்ணுக்கு முதலுதவி மற்றும் குடிநீர் வழங்கிய போலீசார், மேல் சிகிச்சைக்காக அவரை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்படும்போது அவர் சுயநினைவற்ற நிலையில் இருந்ததால், அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் மற்றும் எதற்காக ரயிலிலிருந்து குதித்தார் என்ற விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை. அவரது உடல்நிலை சீரான பிறகே முழுமையான விசாரணை நடத்தப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை இரவு உயிரிழந்த இளைஞரின் அடையாளமும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

பிரசித்தி பெற்ற சுற்றுலா மற்றும் ஆன்மீகத் தலமான ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் மூலம் வருகின்றனர். பாம்பன் கடல் மீது புதிதாகக் கட்டப்பட்டுள்ள ரயில்வே பாலத்தைக் கடக்கும்போது, சில பயணிகள் ஆபத்தான முறையில் செல்ஃபி எடுப்பதும், வீடியோ பதிவு செய்வதுமாக செயல்படுவதால், தவறி கடலில் விழுந்து மீனவர்களால் மீட்கப்படும் சம்பவங்களும் அவ்வப்போது நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.