3 முறை வலிப்பு ஏற்பட்டும் மூச்சு இருக்கிறதென எதுவும் செய்யாமல் இருந்த ஆசிரியர்- பரிதாபமாக பறிப்போன மாணவியின் உயிர்
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பெண்கள் மேல்நிலை_பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ஸ்ரீநதி பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் உயிரிழந்துள்ளார்.
பெரியகுளம் வடகரை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த துரைச்சாமி- முருகேஸ்வரி தம்பதியரின் மகள் ஸ்ரீநதி. இவர் பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகின்றார். நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற மாணவி காய்ச்சல் காரணமாக பள்ளியில் மயக்கம் அடையும் சூழ்நிலையில் இருந்துள்ளார். இதனை கவனித்த சக மாணவிகள், வகுப்பு ஆசிரியர் துணையுடன் பள்ளி வகுப்பறை மேசையில் அமர வைத்து தண்ணீர் தெளித்துள்ளனர். மூச்சு உள்ளது ஆகவே ஒன்றும் செய்ய வேண்டாம் என சக மாணவிகளிடம் ஆசிரியர் கூறியுள்ளார்.
இதனை அடுத்து வகுப்பறை மேசையில் படுத்திருந்த மாணவிக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. வலிப்பை சரி செய்ய, முதலுதவி சிகிச்சை அளிக்கக் கூட பள்ளி நிர்வாகம் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சக மாணவிகளின் கண்ணெதிரே ஸ்ரீநதி உடலுக்கு முடியாமல் அவதியுற்று வரும் சூழலை கண்டு மிகுந்த மன வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் ஆசிரியர் மாணவி ஸ்ரீநதியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். கூலி வேலைக்கு சென்றிருந்த ஸ்ரீநதியின் பெற்றோர் பள்ளி வருவதற்கு சுமார் 20 நிமிடங்கள் ஆகியுள்ளன. அதுவரை மாணவியை வலிப்பு நிலையிலேயே ஆசிரியர்கள் வைத்துள்ளதாக கூறப்படுகின்றது. சற்று நேரத்தில் மாணவி பள்ளியிலே மயக்க நிலைக்கு சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து பள்ளிக்கு வருகை தந்த மாணவியின் பெற்றோர் பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த தனது மகளை ஆட்டோ மூலம் பெரியகுளம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஶ்ரீநதி இறந்ததை உறுதி செய்துள்ளனர்.
அதனை தொடர்ந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறுமி ஸ்ரீ நதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பெரியகுளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் இல்லாதது, மற்றும் ஆசிரியர்கள் பள்ளி மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க முன்வராதது, பள்ளி வளாகத்தில் முதலுதவி சிகிச்சை வசதி இல்லாதது, பள்ளி மாணவிக்கு பிரச்சனை ஏற்பட்ட போது முறையாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாதது, அவசரகால வாகனமான 108ற்கு கூட தகவல் தெரிவிக்காமல் காலதாமதம் ஏற்படுத்தியது, சக பள்ளி மாணவிகள் மத்தியில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த மாணவியை சக மாணவிகளின் மனநிலை பாதிப்படையும் வகையில் அவரது உயிரை பறிக்கும் வகையில் பள்ளி நிர்வாகம் அலட்சியப் போக்கில் செயல்பட்டது என பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கூறி வருகின்றனர். அரசு பள்ளி நிர்வாகத்தின் அலட்சிய போக்கால் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்துள்ள சோகம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

