திருமண மகிழ்ச்சி முடிவதற்குள் நேர்ந்த சோகம் : கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்து..!
கொடைக்கானலில் இருந்து பழனிக்கு செல்லும் வழியில் சவரிக்காடு எனும் பகுதியில் 100 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுவரை 14 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 10 பேரை மீட்கும் பணி தொடர்ந்து நடக்கிறது. சம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு வீரர்களுடன் பொதுமக்களும் மீட்புப் பணியை மேற்கொண்டுள்ளனர்.
பழனி மதினா நகரைச் சேர்ந்த முஜிபூர் ரஹ்மான் என்பவரது மகளின் திருமணம் 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானலில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற மறுவீட்டு நிகழ்ச்சிக்காக மதினா நகரைச் சேர்ந்த 24 பேர் வேனில் கொடைக்கானல் சென்றனர்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் அனைவரும் அதே வாகனத்தில் பழனிக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த வேனை 40 வயதான சிலம்பரசன் ஓட்டி வந்தார். இந்த வேன் நேற்று (நவம்பர் 19) இரவு கொடைக்கானல்-பழனி மலைப் பாதையில் சவரிக்காடு அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்பகுதி மக்களும் மீட்புப் பணியில் உதவினர்.
மலைப்பகுதியில் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்ததால், மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் கயிறு கட்டி கீழே இறங்கி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளைப் பார்வையிட்டார்.
விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு பழனி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்; 16 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் ஆபத்தான நிலையில் உள்ள 2 பேருக்கும் மேற்பட்டோர் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

