திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் கோயிலில் மீண்டும் விபரீதம்
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்குப் பிள்ளையார் கோவிலில் சிக்கிக் கொண்ட பெண் நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டார்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள இடுக்கு பிள்ளையார் கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தவாறு உள்ளே நுழைந்து, மெல்லமாக கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும். குகை போன்ற பகுதியில் இருந்து வெளியே வந்த உடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்கின்றனர். பெரும்பாலான கிரிவல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் நுழைந்து வெளியே வந்து வழிபட்டு செல்கின்றனர். நேற்று இரவு ஆந்திராவை சேர்ந்த மணிக்குமார் (36 வயது) என்பவர் இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
நேற்று இடுக்கில் சிக்கி ஆந்திராவைச் சேர்ந்த பக்தர் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் மறைவதற்குள், இன்று இடுக்குப் பிள்ளையார் கோவிலில் பெண் ஒருவர் சிக்கிக் கொண்டார். போலீசார் அப்பெண்ணை நீண்ட நேரப் போராட்டத்திற்கு பின் மீட்டனர். இந்நிலையில் உடல் பருமனாக இருப்பவர்கள் இடுக்குப் பிள்ளையார் கோவிலுக்குள் செல்லக் கூடாது என அறிவிப்பு பலகை வைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

