சொந்த மாமாவே எமனாக மாறிய சோகம்..! 30 வயதிலேயே பறிபோன இளம் உயிர்!
நெல்லை மாவட்டம், மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுப்பையாபுரம் மெயின் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்காளை (30). இவருக்கும், இவரது தாய் மாமாவான அதே பகுதியைச் சேர்ந்த தாமஸ் பாண்டியன் (39) என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக இடபிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் நிலவி வந்தது.
மேலும், நில விவகாரம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் குறித்து மானூர் காவல் நிலையத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சுப்பையாபுரம் மெயின் தெருவில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட் அருகே முத்துக்காளை நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த தாமஸ் பாண்டியன் மற்றும் அவரது உறவினரான வீராணத்தைச் சேர்ந்த அஜீத்குமார் (28) ஆகிய இருவரும் முத்துக்காளையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
தகராறு முற்றவே, ஆத்திரமடைந்த தாமஸ் பாண்டியனும், அஜீத்குமாரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் முத்துக்காளையை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்து இரத்த வெள்ளத்தில் சரிந்த முத்துக்காளையை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த முத்துக்காளை, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வந்த நாங்குநேரி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளரும், நெல்லை ஊரக உட்கோட்டப் பொறுப்பாளருமான சதீஷ் கண்ணன், மானூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசாருடன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.
மேலும், இக்கொலை சம்பவம் குறித்து மானூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடி தலைமறைவாக உள்ள முத்துக்காளையின் தாய் மாமா தாமஸ் பாண்டியன் மற்றும் அவரது உறவினர் அஜீத்குமார் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் அரங்கேறிய இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

