பயிற்சிக்கு சென்ற மகள் பிணமாக திரும்பிய சோகம்: சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரயில் மோதி மாணவி உயிரிழப்பு..!!
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த செங்குன்றம் பாரதி நகரைச் சேர்ந்தவர் கே. யுவஸ்ரீ (வயது 16). தடகள வீராங்கனையான இவர், வழக்கம்போல நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையம் அருகேயுள்ள மைதானத்திற்கு ஓட்டப் பயிற்சிக்காக சென்றுள்ளார்.
மைதானத்திற்கு செல்வதற்காக அவர் ரெயில்வே தண்டவாளத்தை கவனக்குறைவாகக் கடக்க முயன்றுள்ளார். அப்போது தாம்பரம் மார்க்கத்திலிருந்து வேகமாக வந்த தமிழ்நாடு சம்பர்க் கிராந்தி விரைவு ரெயில் எதிர்பாராத விதமாக யுவஸ்ரீ மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் பலத்த காயமடைந்து உயிருக்குப் போராடினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார், படுகாயமடைந்த யுவஸ்ரீயை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (சனிக்கிழமை) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த துயரச் சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

