ஆவடி அருகே சோகம்..! மின்சார ஒயர்கள் அறுந்து விழுந்ததில் 2 கறவை மாடுகள் உயிரிழப்பு..!

 
1

ஆவடி அண்ணனூரை சேர்ந்த குப்பன் மற்றும் பொன்னி ஆகியோருக்கு சொந்தமான இரண்டு கறவை மாடுகள், பொன்னியம்மன் தெரு பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது, அங்கு அறுந்து விழுந்து கிடந்த மின்சார ஒயர்களில் இருந்து மின்சாரம் பாய்ந்ததாகக் தெரிகிறது. இதில் இரண்டு மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன.

அண்ணனூர் பகுதியில் பல இடங்களில் மின்கம்பிகள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் விழும் அபாயகரமான நிலையில் இருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தற்போது மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

உயிரிழப்புகள் ஏற்படும் முன்பாக போர்க்கால அடிப்படையில் சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்சார ஒயர்களை மாற்றியமைக்க வேண்டும் என்றும், மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.