நெல்லையில் சோகம்..! நிமோனியா காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி..!

 
1

நெல்லை மேலப்பாளையம், பெரிய குத்பா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ரசூல் என்பவரின் 4 வயது மகள் ரிஃப்கா பாத்திமா, கடந்த சில நாட்களாகக் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வந்தாள். இதையடுத்து, அவரது பெற்றோர் சிறுமியை நெல்லையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவளுக்கு அடினோ வைரஸ் (Adenovirus) தொற்றால் நிமோனியா காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்து தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி மே 15 அன்று அந்தச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

மேலப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபகாலமாக நிலவி வரும் சுகாதாரச் சீர்கேடு காரணமாக கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி, காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தச் சூழலில் 4 வயது சிறுமி காய்ச்சலால் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையே காய்ச்சல் பரவல் குறித்துத் தகவல் அறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் மேலப்பாளையத்தில் முகாமிட்டுத் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து நெல்லை மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் முரளி கூறுகையில், முக்கியமாக உயிரிழந்த சிறுமிக்கு நுரையீரலில் தீவிர பாதிப்பு (நிமோனியா) இருந்தது என்றும், அவளது மறைவைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மற்ற குழந்தைகளுக்கு உடனடியாக மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டதில் வேறு எந்தக் குழந்தைக்கும் இது போன்ற நிமோனியா பாதிப்பு இல்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.

அடினோ வைரஸ் என்பது பொதுவாக சளி, தொண்டை வலி மற்றும் காய்ச்சலை ஏற்படுத்தும் ஒரு வகை வைரஸ் கிருமியாகும். இது குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்களை அதிகம் தாக்கும் இயல்புடையது. இந்த வைரஸ் தீவிரமடைந்து நுரையீரலைத் தாக்கும் போது அது நிமோனியா காய்ச்சலாக மாறுகிறது. உலகளவில் ஒவ்வொரு ஆண்டும், குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகள் பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்றால் ஏற்படும் இந்த நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.

சளியுடன் கூடிய இருமல், மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி மற்றும் கடுமையான காய்ச்சல் ஆகியவையே இந்நோய்க்கான முக்கிய அறிகுறிகளாகும். முறையான தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்வது, குழந்தைகளுக்குக் காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகள் இருந்தால் சுய மருத்துவம் செய்யாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது, மற்றும் சுவாசக் கோளாறு தீவிரமடைந்தால் தாமதிக்காமல் வென்டிலேட்டர் வசதியுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்வது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலமே இந்நோயின் ஆபத்திலிருந்து குழந்தைகளைக் காக்க முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.