காலையில் அரங்கேறிய சோகம் : வெள்ளியங்கிரி மலையேறிய இளைஞர் பலி..!

 
1

கோவை மாவட்டம் பூண்டி அருகே உள்ள வெள்ளியங்கிரி மலையின் உச்சியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சுயம்பு லிங்கமாகக் காட்சி தருகிறார். இந்த இடத்தை அடைய ஏழு மலைகளைக் கடந்து செல்ல வேண்டும். வெள்ளியங்கிரி மலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.


பிப்ரவரி மாதம் முதல் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. மலையேறும் பக்தர்களுக்கு வனத்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று வெள்ளியங்கிரி மலை ஏறிய டாக்சி ஓட்டுநர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த துயரம் நிகழ்ந்துள்ளது. கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த மயில்சாமி (32) என்பவர் இன்று அதிகாலை, வெள்ளியங்கிரியில் உள்ள நான்காவது மலைப்பாதையில் செல்லும் போது உயிரிழந்தார். அவருக்கு ஏற்கனவே இதயபாதிப்பு இருந்ததும், குடும்பத்தினர் எச்சரிக்கையை மீறி மலையேறியதும் தற்போது தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் உடலை மலைக்கு கீழே கொண்டு வரும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

வெள்ளியங்கிரி மலை முக்கியத்துவம்: வெள்ளியங்கிரி மலை தமிழ்நாட்டில் கோயம்புத்தூரிலிருந்து மேற்கே 40 கிமீ தொலைவில் சிறுவாணி மலையை ஒட்டி கிழக்கு மேற்காக அமைந்துள்ளது. இது மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதியாகும். இம்மலைக்கு கிழக்கே தொடர்ச்சியாக மருதமலை அமைந்துள்ளது. வெள்ளியங்கிரி மலை ஒரு புனிதத் தலமாகவும் (தென்கயிலை), சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. வெள்ளிமலை, தட்சிணயிலாயம், தென்கயிலை எனப்பெயர்கள் கொண்ட வெள்ளியங்கிரி சிவபெருமானின் திருஉருவாகவே போற்றப்படுகிறது. சித்தர்களும் முனிவர்களும் எப்போதும் தவம் செய்துவரும் உமையவள் வேண்டுதலின்படி சிவபெருமான் திருநடனம் புரிந்த வெள்ளியம்பலமே வெள்ளியங்கிரி ஆகும். இது மேகங்கள் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் “வெள்ளியங்கிரி” என்ற பெயர் பெற்றது. இம் மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. இந்த அடிவாரப் பகுதியில் வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. சுமார் 3500 அடி உயரமுடைய (கடல் மட்டத்திலிருந்து 5000 அடி,1524 m) இம்மலை ஏழு முடிகளைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்களை கண்டு மகிழ்ந்து செல்லலாம். ஏழாவது மலையின் உச்சியில் சிறிய சுயம்பு சிவன் கோவில் உள்ளது.