மதுரையில் பெரும் சோகம்..! சுடுதண்ணீர் பாத்திரத்தில் விழுந்த 7 மாத குழந்தை உயிரிழப்பு..!
மதுரை, மாடக்குளம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சேதுபதி. இவரது மனைவி விஜயலட்சுமி. இந்த தம்பதிக்கு 7 மாத பெண் குழந்தை இருந்தது. சேதுபதி பரமக்குடியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி விஜயலட்சுமி தனது குழந்தையை கட்டிலில் தூங்க வைத்துவிட்டு, தான் குளிப்பதற்காக 'பிளக் பாய்ண்ட்' வாட்டர் ஹீட்டர் மூலம் தண்ணீரை சுட வைத்து கொண்டிருந்தார்.
அச்சமயம் விஜயலட்சுமி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தபோது, கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை புரண்டு படுத்ததால் தவறி சுடுதண்ணீர் பாத்திரத்தில் தலை குப்புற விழுந்தது. அப்போது குழந்தையின் அழுகுரல் கேட்டு ஓடி வந்த விஜயலட்சுமி உடனடியாக குழந்தையை மீட்டு தூக்கிக்கொண்டு அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்குச் சென்றார். கொதித்துக் கொண்டிருந்த சுடுநீர் குழந்தையின் தலை முதல் மார்பு வரை தீவிரமான காயத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி குழந்தை இன்று இறந்து போனது. குழந்தையின் உடலை கண்டு தாய் விஜயலட்சுமியும், தந்தை சேதுபதி உள்ளிட்ட உறவினர்கள் கதறி அழுத காட்சி காண்போரை உருக்குவதாக இருந்தது.


