‘இப்படி சிக்கிட்டனே..’ செயினை பறிக்க முயன்று கீழே விழுந்து எஸ்கேப் ஆன திருடனுக்கு நேர்ந்த சோகம்
கடலூர் அருகே இரண்டு சக்கர வாகனத்தில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் சென்ற பெண்ணிடம் செயின் பறிக்கும்போது பைக் உடன் கீழே விழுந்து தப்பித்த கொள்ளையன் மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலமாக வந்து சிக்கினான்.
புதுச்சேரி சேர்ந்தவர் சந்தோஷ்(32). இவரது மனைவி சுதா(28). இவரது இரண்டு பிள்ளைகள் புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சந்தோஷ் தாய் வீடான கடலூர் அடுத்த பொன்னங்திட்டு பகுதிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது சமீபத்தில் திறக்கப்பட்ட கடலூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் உள்ள மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் திடீரென்று சந்தோஷ் மற்றும் குடும்பத்தினர் சென்ற மோட்டார் சைக்கிளில் ஒராசிக்கொண்டு, சுதா கழுத்தில் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றார். அப்போது திடீரென்று சுதாரித்துக் கொண்ட சுதா அந்த இளைஞரின் டீ சட்டை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். அப்போது சந்தோஷ் மற்றும் மர்ம நபர் இரண்டு பேரும் தடுமாறி மோட்டார் சைக்கிள் இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து சந்தோஷ், சுதா ஆகியோர் திருடன் திருடன் என கூச்சலிட்டதால் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் உடனடியாக அந்த மர்ம வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் மர்ம வாலிபர் தனது செல்போனை தவற விட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் கண்ணிமைக்கும் நேரத்தில் காயத்துடன் தப்பித்து சென்றார். இதனைத் தொடர்ந்து சந்தோஷ், சுதா மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த கணவன் - மனைவி இருவருக்கும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மனைவிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் கணவனுக்கும் கால் மற்றும் கைப்பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த புதுச்சத்திரம் போலீசார் சந்தோஷ், சுதா ஆகியோரிடம் கடலூர் அரசு மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மேலும் சம்பவ இடத்திலும் விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் சம்பவம் நடந்து சில மணி நேரத்தில் குள்ளஞ்சாவடி பகுதியில் விபத்தில் காயம் அடைந்ததாக வாலிபர் ஒருவர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். இதனை அறிந்த போலீசார் சந்தேகம் அடைந்து அந்த வாலிபரிடம் எந்த பகுதியில் விபத்து ஏற்பட்டது என்பதனை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது முன்னுக்கு பின் முரணான தகவல்களை அந்த வாலிபர் தெரிவித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் அந்த வாலிபரை புகைப்படம் பிடித்து சுதாவிடம் சென்று போலீசார் காண்பித்த போது மேற்கண்ட நபர் தான் நகையை திருட முயற்சி செய்தது தெரிய வந்தது. மேலும் சம்பவத்தின் போது தவறி விட்டு சென்ற செல்போனை சுதா போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இந்த நிலையில் வடலூர் சேர்ந்த அஜித்குமார் (27) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து கணவன் மனைவி மற்றும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அஜித்குமாருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். இது குறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செயின் பறிப்பில் ஈடுபட்டு அதனால் ஏற்பட்ட விபத்தில் கால் எலும்பு முறிந்த நிலையில் தப்பி ஓடிய நபர் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு வந்து அங்கு சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் - சிதம்பரம் சாலையில் 24 மணி நேரமும் அதிகளவில் போக்குவரத்து இருந்து வரும் நிலையில் இந்த நகைப் பறிப்பு சம்பவம் அரங்கேரி உள்ளது குறிப்பிடத்தக்கது.