போக்குவரத்து விதிமீறல் - ரூ.13 கோடி வசூல்

சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியவர்களிடம் இருந்து சுமார் ரூ. 13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. சாலை விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுபவர் ஆக இருக்கலாம், மது அருந்துவிட்டு வாகனத்தை இயக்குபவராக இருக்கலாம் , அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குபவராக இருக்கலாம். இப்படியாக பல்வேறு காரணங்களால் விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2021 ஆம் ஆண்டில் தமிழகத்தில் மட்டும் 55 ஆயிரத்து 682 விபத்துக்கள் பதிவாகியுள்ளது. இது 2020 ஆம் ஆண்டு விட பத்தாயிரம் சாலை விபத்துக்கள் அதிகம் கொண்டதாக காணப்பட்டது. தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 2021 ஆம் ஆண்டு 15 ஆயிரத்து 384 பேர் மரணம் அடைந்தனர். இதன் மூலம் இந்தியாவில் சாலை விபத்துகளால் அதிக மரணங்கள் நேரிடுவதில் தமிழகம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. அதன்படி சாலைப் போக்குவரத்தை கண்காணித்து, விபத்துகளை தவிர்க்கும் வகையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க சென்னையில் 10 இடங்களில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அபராதம் செலுத்தாத 9526 பேரையும் அபராதம் செலுத்தி அறிவுறுத்திய சென்னை காவல் துறையினர் நேரில் அழைத்து வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த 20ஆம் தேதி 586 வழக்குகள் தீர்வு காணப்பட்டு அபராத தொகையாக 60 லட்சத்து 36 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 12,551 வழக்குகள் தீர்வு காணப்பட்டு 12 கோடியே 99 லட்சத்து 8 ஆயிரத்து 600 அபராத தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.