ஹாங்கிங்கால் ஒலி மாசு - ‘சிக்னலில் தண்டனை’யை கையிலெடுத்த போக்குவரத்து காவல்துறை..
சென்னையில் ஒலி மாசை கட்டுப்படுத்த ‘சிக்னலில் தண்டனை’ என்கிற புதிய நடவடிக்கையை சென்னைபோக்குவரத்து காவல்துறை கையில் எடுத்துள்ளது.
சென்னை போக்குவரத்து காவல்துறை ‘ஜீரோ இஸ் குட்’ என்கிற போக்குவரத்து விழிப்புணர்வை தொடர்ந்து, ஒலி மாசு மற்றும் ஹாங்கிங் ஆகியவற்றை குறைக்க நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் ஒலி மாசுவை முறைப்படுத்துவதற்கு ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ள தமிழக அரசால் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை இருக்கும் நகரங்களான சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ,திருச்சி ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். முதற்கட்டமாக தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் ரூ. 50 லட்சம் ரூபாய் செலவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். குறிப்பாக ‘நாய்ஸ் மேப்பிங்’ என்ற முறையில் அதிக ஒலி இருக்கும் இடங்களை சென்சார் பயன்படுத்தி, கண்காணித்து கண்டறிந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த நிதியானது தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பரிந்துரையின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது
தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் இடம்பெயர்தல் காரணமாக மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. இதனால் வாகனப் போக்குவரத்து மற்றும் அந்த வாகனங்களின் மூலம் ஹார்ன் செய்தல் அதிகரித்துள்ளது. மேலும் வேகமாக நகரமாக காதல் காரணமாகவும் ,தொழில்துறை நடவடிக்கைகள், கட்டிடங்களை இடிப்பதும், கட்டுமானங்களை மேற்கொள்வதும், நகர மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்வது உள்ளிட்டவை அதிகரித்து வருகிறது. இது போன்ற காரணங்களால் வெளிப்படும் ஒலியின் அளவு என்பது மக்களின் உடல் நலத்தையும் மனநலத்தையும் பாதிக்கும். இதனால் ஒலி மாசுவை கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாக உள்ளது.
இதற்காக ஒலி மாசுவை முறைப்படுத்துதல் மற்றும் கட்டுப்பாடு விதிகள் அடிப்படையில் நகரங்கள் தொழிற்சாலை ,வணிகம் குடியிருப்பு மற்றும் அமைதியான மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. பிரிக்கப்பட்ட மண்டலங்களில் ஒலியின் அளவு காலையிலும், இரவு நேரத்திலும் எவ்வளவு இருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது
தமிழக அரசு அளித்த நிதி மூலமாக நிபுணர்கள் மற்றும் முன்னணி கல்வி நிறுவனங்கள் மூலம் நாய்ஸ் மேப்பிங் என்ற அடிப்படையில் ஒலி மாசு அளவை கண்டறியப்பட்டு அதற்கேற்றார் போல் சுற்றுச்சூழலை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது
சென்னையில் ஒலி மாசுவை குறைக்க வாகனங்களில் ஹாங்கிங் மூலம் அதிக ஒலி எழுப்புவதை கட்டுப்படுத்த சிறப்பு நடவடிக்கைகள் சென்னை போக்குவரத்து காவல்துறை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளது. அதிக ஒலி எழுப்பும் ஹார்ன்கள பயன்படுத்தும் வாகனங்கள் மற்றும் ஓட்டுநர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாகவும் போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
ஹாங்கிங்கை குறைக்க இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் காவல்துறை பின்பற்றும் நடைமுறைகளை சென்னை காவல் துறையும் பின்பற்ற உள்ளதாக தெரியவந்துள்ளது. அதன்படி மும்பை காவல்துறை பின்பற்றும் "சிக்னல்களில் தண்டனை" என்ற அடிப்படையில், சிக்னல்களில் ஒலி அளவை அளக்கும் டெசிபல் மீட்டர்களை பொருத்தி, அந்த மீட்டர்களில் ஹாங்கிங் காரணமாக அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஒலியின் அளவு அதிகமாக இருப்பது தெரிய வந்தால், தொடர்ந்து ரெட் சிக்னல் இருந்து கொண்டே இருக்கும் வகையில் புதிய நடைமுறைகளைப் பின்பற்ற உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
குறிப்பாக சென்னை போக்குவரத்து காவலர்கள் வாகனங்கள் அதிகம் செல்லும் சாலைகளில் பணியில் ஈடுபடுகிற காரணத்தினால் ஒலி மாசு காரணமாக உடல் பாதிப்பு ஏற்படுவதை குறைக்க, காவலர்களுக்கு ear plug வழங்கப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.