‘அப்படி தாங்க பால் கெட்டு போகும்‘... ஆவின் நிர்வாகத்தின் விளக்கத்தால் வியாபாரிகள் அதிர்ச்சி

 
ஆவின்

மதுரை ஆவின் பால் பண்ணையில் இருந்து விநியோகம் செய்யப்படும் டீமேட் ரக பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பழங்காநத்தம், ஆரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் விநியோகம் செய்யப்பட்ட பால் பாக்கெட்டுகள் கெட்டுப் போனதாக வியாபாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். வியாபாரம் பாதிக்கப்படுவதோடு, ஆவின் பால் பண்ணைக்கு அலையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஆவின் நிர்வாகம், கோடை வெயிலின் தாக்கத்தால் பால் பாக்கெட்டுகள் விரைவில் கெட்டுப் போகிறது எனக் கூறியுள்ளது.

முன்னதாக நேற்று கொடிவேரி அணை ஆவின் பாலகம் உள்ளிட்ட பாலகங்களில் காலாவதியான பிஸ்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக கொடிவேரி அணை- பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து மாவட்ட உணவு கட்டுப்பாடு அலுவலர் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு இணைய வழியில் விவசாய சங்கத்தினர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சித்தோடு ஆவின் தலைமை அலுவலகத்தில் இருந்து பிஸ்கெட்டுகளை ஏற்றி வந்த ஆவின் வாகனத்தை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அந்த வாகனத்திலிருந்து காலாவதியான பிஸ்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.