தொடர் விடுமுறையை ஒட்டி குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்..
கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறையொட்டி கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்துள்ளனர்.
இன்றைய தினம் ( ஆக.24) சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுகிழமை தொடந்து நாளை மறுநாள் ( ஆக.26) கிருஷ்ணர் ஜெயந்தி என 3 நாட்கள் தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரியில் குவிந்துள்ளனர். சுற்றுலா தலத்தில் இன்று அதிகாலை நான்கு மணி முதலே குவிந்த உள்ளூர், வெளி மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், இரண்டு மணி நேரம் காத்திருந்து குமரி கடலில் கிழக்கே அதிகாலையில் சூரியன் உதயமாகும் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.
அதேபோல் குமரியில் குளிர்ச்சியான கால நிலை நிலவி வருவதால் அதனை அனுபவித்தப்படி திரிவேணி சங்கமம், படித்துறை, சன்ரைஸ் பாயின்ட் பகுதிகளில் கடலில் குளித்தும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் காந்தி மண்டபம், கடற்கரை பகுதிகளில் பாசி, சங்கு, மாலைகள் அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கிய சுற்றுலா பயணிகள், செல்ஃபி மற்றும் புகைபப்டங்கள் எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகையால் குமரி வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைகளையும் பார்வையிட்டனர்.