நாளை மெகா திறப்பு விழா! – 8 ரயில் நிலையங்களின் முகமே மாறப்போகிறது: பிரதமர் மோடி அதிரடி..!

 
1

நாடு முழுவதும் 1,300 ரயில் நிலையங்கள் மறுசீரமைக்கப்பட்டு பயணிகளுக்கு நவீன, பாதுகாப்பான, தூய்மையான வசதிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளூர் கலாச்சாரம், தொன்மை, கட்டடக்கலை ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் ரயில் நிலைய கட்டடங்கள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் பொம்மிடி, மொரப்பூர், திருவாரூர், பொள்ளாச்சி, காரைக்குடி, மணப்பாறை, சோழவந்தான், ஸ்ரீவல்லிபுத்தூர் ஆகிய 8 ரயில் நிலையங்களில் ரூபாய் 100 கோடி செலவில் நடைபெற்று வந்த மறுசீரமைப்பு பணிகள் நிறைவு பெற்று பயணிகள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த நவீன வசதிகளுடன் கூடிய மறுசீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மார்ச் 1 அன்று மதுரையில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிலையில், மதுரை கோட்டத்தில் காரைக்குடி, மணப்பாறை, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் ஏற்படுத்தப்பட்ட நவீன வசதிகள் பற்றிய தகவல்களை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

காரைக்குடி

செட்டிநாட்டு பகுதி பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் ரயில் நிலைய கட்டடங்கள் மற்றும் வெளிவளாகப் பகுதிகள் மறுசீரமைக்கப்பட்டுள்ளன. 18 மீட்டர் அகலத்தில் இரண்டு வரவேற்பு வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நடைமேடைகளுக்கு எளிதாக மாறிச் செல்லும் வகையில் 6 மீட்டர் அகல புதிய நடை மேம்பாலத்துடன் மூன்று மின் தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. 26 கார்கள் நிறுத்தும் வகையில் 1,054 சதுர மீட்டர் அளவிலும் மற்றும் 204 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 3,045 சதுர மீட்டர் அளவிலும் மேற்கூரையுடன் கூடிய வாகன காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,470 சதுர மீட்டர் வெளிவளாக பகுதி மற்றும் அணுகு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 391 சதுர மீட்டரில் பயணிகள் ஓய்வு அறை, 350 சதுர மீட்டர் மேற்கூரையுடன் கூடிய நடைபாதை, 340 சதுர மீட்டர் உள்வளாக பயணிகள் காத்திருப்பு பகுதி, 459 சதுர மீட்டர் நுழைவாயில் மேற்கூரை, 386 மீட்டர் நடைமேடை சுற்றுச்சுவர், நடைமேடையில் 3,060 சதுர மீட்டர் அளவிற்கு புதிய மேற்கூரை, 48 மின்னணு ரயில் பெட்டி விவர தகவல் பலகைகள், 7 மின்னணு தொலைக்காட்சி தகவல் பலகைகள், 2 மின்னணு கடிகாரங்கள், 26 ஒலிபெருக்கிகளுடன் கூடிய இரண்டு பொது அறிவிப்பு சாதனங்கள், கூடுதல் விளக்குகள், மின் விசிறிகள் ஆகியவையும் மறுசீரமைப்பில் பொலிவு பெற்றுள்ளன.

ஸ்ரீவில்லிபுத்தூர்

கோவில் மாநகரான ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலைய கட்டடம் புதுப்பிக்கப்பட்டு எழிலான முகப்புடன் புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. 8 மீட்டர் அகல வரவேற்பு வளைவுகள் கூடிய நுழைவாயில், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் அருகில் உள்ள நடைமேடைக்கு எளிதாக சென்று வர 2 மின் தூக்கிகள், 8 கார்கள் நிறுத்தும் வகையில் 455 சதுர மீட்டர் அளவிலும், 40 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 560 சதுர மீட்டர் அளவிலும் மேற்கூரையுடன் கூடிய வாகன காப்பகங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 2,295 சதுர மீட்டர் வெளிவளாக பகுதி மற்றும் அணுகு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 108 சதுர மீட்டர் இரண்டு மாடி கட்டடத்தில் பயணிகள் ஓய்வு அறை மற்றும் தங்கும் அறைகள், 520 மீட்டர் ரயில் நிலைய வளாக சுற்றுச்சுவர், இரண்டு ரயில் பெட்டிகள் நீளத்திற்கு புதிய நடைமேடை மேற்கூரைகள், 48 மின்னணு ரயில் பெட்டி விவர தகவல் பலகைகள், 7 மின்னணு தொலைக்காட்சி தகவல் பலகைகள், ஒரு மின்னணு கடிகாரம், 26 ஒலி பெருக்கிகளுடன் கூடிய இரண்டு பொது அறிவிப்பு சாதனங்கள், கூடுதல் விளக்குகள், மின்விசிறிகள், பயணிகள் வசதிகள் உருவ வடிவம் தாங்கிய வழிகாட்டு தகவல் பலகைகள் ஆகிய புதிய வசதிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் பயணிகளுக்கு கிடைத்துள்ளன.

சோழவந்தான்

சுற்றுப்புற கிராம பொதுமக்களுக்கு பேருதவியாக உள்ள சோழவந்தான் ரயில் நிலைய கட்டடம் புதுப்பிக்கப்பட்டு எழிலான முகப்புடன் புதிய நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், பெண்கள் ஆகியோர் அருகில் உள்ள நடைமேடைக்கு எளிதாக சென்று வர 2 மின் தூக்கிகள், 13 கார்கள் நிறுத்தும் வகையில் 250 சதுர மீட்டர் அளவிலும், 42 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 112 சதுர மீட்டர் அளவிலும் மேற்கூரையுடன் கூடிய வாகன காப்பகங்கள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 2,797 சதுர மீட்டர் வெளிவளாக பகுதி மற்றும் அணுகு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 252 சதுர மீட்டரில் பயணிகள் ஓய்வு அறை, 220 மீட்டர் நடைபாதை மற்றும் கழிவு நீர் வடிகால், 48 சதுர மீட்டரில் பயண சீட்டு அலுவலகம், 215 மீட்டர் ரயில் நிலைய வளாக சுற்றுச்சுவர், 80 மீட்டர் நடைமேடை சுற்றுச்சுவர், இரண்டாவது நுழைவாயில் மேம்பாடு மேலும் 2,500 சதுர மீட்டர் வாகனங்கள் நிறுத்தும் பகுதி, 6600 சதுர அடி நடைமேடை பகுதி உயர்த்தப்பட்டு காங்கிரீட் தளம் அமைப்பு, 48 மின்னணு ரயில் பெட்டி விவர தகவல் பலகைகள், 7 மின்னணு தொலைக்காட்சி தகவல் பலகைகள், 2 மின்னணு கடிகாரங்கள், 26 ஒலிபெருக்கிகளுடன் கூடிய இரண்டு பொது அறிவிப்பு சாதனங்கள், கூடுதல் விளக்குகள், மின்விசிறிகள் ஆகியவை சோழவந்தான் பயணிகளுக்கு புதிய நவீன வசதிகளாக கிடைத்துள்ளது.

மணப்பாறை

முறுக்கு தயாரிப்பில் புகழ் பெற்ற மணப்பாறை நகர ரயில் நிலையக் கட்டடம் நவீனமயப்படுத்தப்பட்டுள்ளது. முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நடைமேடைகளுக்கு எளிதாக மாறிச் செல்லும் வகையில் 6 மீட்டர் அகல புதிய நடை மேம்பாலத்துடன் 2 மின் தூக்கிகள் அமைக்கப்பட்டுள்ளன. 13 கார்கள் நிறுத்து வகையில் 250 சதுர மீட்டர் அளவிலும் மற்றும் 252 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் 1,040 சதுர மீட்டர் அளவிலும் மேற்கூரையுடன் கூடிய வாகன காப்பகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,797 சதுர மீட்டர் வெளிவளாக பகுதி மற்றும் அணுகு சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 252 சதுர மீட்டரில் பயணிகள் ஓய்வு அறை, 220 மீட்டர் நடைபாதை மற்றும் கழிவு நீர் வடிகால், 112 சதுர மீட்டர் நுழைவாயில் மேற்கூரை, 80 மீட்டர் நடைமேடை சுற்றுச்சுவர், 215 மீட்டர் ரயில் நிலைய வளாக சுற்றுச்சுவர், 15 மீட்டர் அகல வரவேற்பு வளைவுடன் கூடிய நுழைவாயில், 150 சதுர மீட்டரில் எழிலான முகப்பு பகுதி, 48 மின்னணு ரயில் பெட்டி விவர தகவல் பலகைகள், 7 மின்னணு தொலைக்காட்சி தகவல் பலகைகள், 2 மின்னணு கடிகாரங்கள், 26 ஒலி பெருக்கிகளுடன் கூடிய இரண்டு பொது அறிவிப்பு சாதனங்கள், கூடுதல் விளக்குகள், மின்விசிறிகள், பயணிகள் வசதிகள் உருவ வடிவ வழிகாட்டு தகவல் பலகைகள் ஆகியவையும் மணப்பாறை பயணிகளுக்கு கிடைத்துள்ளது.

காரைக்குடி, மணப்பாறை, சோழவந்தான், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகியவை ரயில் நிலையங்களிலும், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் மார்ச் 1 அன்று மதியம் 2 மணிக்கு அம்ரித் பாரத் ரயில் நிலைய அர்ப்பணிப்பு விழா நடைபெறும். பின்பு மாலை 3 மணிக்கு மதுரை பிரதமர் விழா நிகழ்ச்சியோடு காணொளி இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, பிரதமர் அம்ரித் பாரத் ரயில் நிலையங்களை நாட்டுக்கு அர்பணிக்கும் நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு களிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.