அரசு சார்பில் நாளை தமிழ்நாடு நாள் விழா - முதல்வர் அறிவிப்பு!!

 
mk Stalin biopic

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில், தமிழ்நாடு நாள் விழா சூலை 18 ஆம் நாள் காலை 11.30 மணியளவில் சிறப்பாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு விழாப் பேருரையாற்றவுள்ளார்கள்.

tn

தமிழ்நாடு நாள் விழாவில், கருத்தரங்கம், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக குறும்படம் திரையிடல் மற்றும் விழா சிறப்பு மலர் வெளியிடப்படுகின்றது. முன்னதாக, இவ்விழாவில் காலை 9.00 மணியளவில் மாநிலத் திட்டக் குழு, துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் அவர்கள் தலைமையில், கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்தக் கருத்தரங்கில், சமூக நீதி கண்காணிப்பு (ம) பாதுகாப்புக் குழுத் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்கள் "தமிழ்நாடு உருவான வரலாறு", திரு. ஆழி செந்தில்நாதன் அவர்கள் "மொழிவாரி மாகாணமும் தமிழ்நாட்டில் நடந்த போராட்டமும்", திரு.வாலாசா வல்லவன் அவர்கள் "தமிழகத்துக்காக உயிர் கொடுத்த தியாகிகள்", முனைவர் ம. இராசேந்திரன் அவர்கள் "தாய்நாட்டுக்குப் பெயர் சூட்டிய தனயன்", சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன் அவர்கள் "முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கிய நவீன தமிழ்நாடு" ஆகிய தலைப்புகளில் கருத்துரையாற்றுகிறார்கள்.இவ்விழாவினை முன்னிட்டு மாநில அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் இலக்கியமாமணி விருது 2021, தமிழ்த் தென்றல் திரு.வி.க. விருது-2021, கபிலர் விருது-2021, உ.வே. சா விருது - 2021, அம்மா இலக்கிய விருது - 2021, காரைக்கால் அம்மையார் விருது - 2021 ஆகிய விருதுகள் வழங்கப்படுகின்றன. மாண்புமிகு தொழில்கள், தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தலைமையுரையும், மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன் அவர்கள் முன்னிலையுரையும் ஆற்றவுள்ளார்கள்.தொல்லியல் துறை சார்பாக அமைக்கப்படும் தொல்பொருட்கள் கண்காட்சியில் கீழடி, ஆதிச்சநல்லூர், சிவகளை, மயிலாடும்பாறை, கொடுமணல் ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்டுள்ள தொல்பொருட்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. மேலும், தமிழ்நாடு நில அளவைத் துறை சார்பில் சென்னை மாகாணத்தின் பழைய மற்றும் தற்போது வரையிலான ஆவணங்கள் மற்றும் வரைபடங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

govt

செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பாக, தமிழ்நாடு நாள் வரலாறு குறித்தும், தமிழ்நாடு நாள் சட்டமன்ற தனித் தீர்மானம் குறித்தும் பல்வேறு அறிஞர் பெருமக்கள் வழங்கிய கருத்துரைகளை உள்ளடக்கிய நுhல் சிறப்பு மலராக வெளியிடப்படுகிறது. இந்நிகழ்ச்சியினையொட்டி, சென்னை காமராஜர் சாலை மெரினா கடற்கரையில் ஒடிசாவைச் சேர்ந்த புகழ்மிக்க மணற்சிற்பக் கலைஞர் பத்மஸ்ரீ திரு.சுதர்சன் பட்நாயக் அவர்களால் தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பமும் உருவாக்கப்படுகிறது.மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நாள் சிறப்பு மணற்சிற்பம் மற்றும் கலைவாணர் அரங்கில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புக் கண்காட்சியினை பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் கண்டுகளிக்கும் வகையில் 18.07.2022 முதல் 20.07.2022 வரை மூன்று நாட்கள் காட்சிப்படுத்தப்படுகிறது.இவ்விழாவில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளவுள்ளார்கள். இந்நிகழ்ச்சியினை சமூக ஊடகங்கள் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சியின் மூலம் நேரலையில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.