நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது சுங்கச்சாவடி கட்டண உயர்வு!

 
Toll

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஐந்து சுங்கச்சாவடிகளில் இரு சுங்கச்சாவடியில் 5 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை சுங்ககட்டணம் உயர்த்தப்படுவது நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

toll

விழுப்புரம் மாவட்டத்தில் ஐந்து சுங்கசாவடிகள் செயல்பட்டு வருகிறது. இதில் விழுப்புரம், திருவண்ணாமலை செல்லும் சாலையான தென்னமாதேவி பகுதியில் இயங்கி வரும் சுங்கச்சாவடி மற்றும் திண்டிவனம் செஞ்சி செல்லும் சாலையிலுள்ள நங்கிலிக்கொண்டான் சுங்கச்சாவடி ஆகிய இரு சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் ஐந்து ரூபாய் முதல் 60 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. அதன்படி கார், ஜீப், வேன் ஒருமுறை பயணிக்க 35 ரூபாயும் இருமுறை பயணிக்க 55 ரூபாயும் மாதாந்திர கட்டணமாக 1200 ரூபாய் வசூல் செய்யப்படவுள்ளது.

இலகுரக வாகனங்கள் ஒருமுறை செல்ல 60 ரூபாயும், இருமுறை செல்ல 85 ரூபாயும், மாதாந்திர கட்டணமாக 1940 ரூபாயும் வசூலிக்கப்படவுள்ளது. டிரக் மற்றும் பேருந்துகளுக்கு ஒருமுறை செல்ல 120 ரூபாயும், இருமுறை செல்ல 185 ரூபாயும், மாதாந்திர கட்டணமாக 4060 ரூபாயும் வசூலிக்கப்படவுள்ளது. மூன்று அச்சில் கொண்ட வாகனங்கள் ஒருமுறை செல்ல 135 ரூபாயும், இருமுறை செல்ல 200 ரூபாயும், மாதாந்திர கட்டணமாக 4430 ரூபாயும் வசூலிக்கப்படவுள்ளது. பல அச்சுகள் உள்ள வாகனங்கள் ஒருமுறை செல்ல 235 ரூபாயும், இருமுறை செல்ல 350 ரூபாயும், மாதாந்திர கட்டணமாக 7755 ரூபாயும் வசூலிக்கப்படவுள்ளது.