அதிரடியாக உயர்ந்த சுங்கச்சாவடி கட்டணம்! முழு விவரம்

 
toll

தமிழ்நாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. 4,6 சக்கர சரக்கு வாகனங்கள் ஒருமுறை பயணம் செய்ய ரூ.380, சென்று திரும்ப ரூ.570 கட்டணமும், 7 மற்றும் கூடுதல் சக்கர வாகனங்கள் 1 முறை பயணம் செய்ய ரூ.465, ஒரே நாளில் சென்று திரும்ப ரூ.695 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. உள்ளூர் கார்கள் ஒரு முறை சுங்கச்சாவடியைக் கடக்க மாதம் ரூ.340 உத்தேசக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

toll plaza

சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சென்னை - தடா இடையே செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியில் இன்று நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது. தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் சில சுங்கச்சாவடிகள், அக்டோபர் மாதம் சில சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்துவது வாடிக்கை. இந்தாண்டு பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி ஏப்ரல் மாதம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு கட்டண உயர்வு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. 

இந்நிலையில் 7கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிவடைந்த நிலையில் தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் சுமார் 30க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டண உயர்வு அமலுக்கு வரவுள்ளது. செங்குன்றம் அடுத்த நல்லூர் சுங்கச்சாவடியில் கார்களுக்கு 75-ரூபாயில் இருந்து 80-ரூபாயாகவும், இலகுரக வாகனங்களுக்கு 120-ரூபாயில் இருந்து 125-ரூபாயாகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு 255 ரூபாயில் இருந்து 265-ரூபாயாகவும், மூன்று அச்சு வாகனங்களுக்கு 280 ரூபாயில் இருந்து 290-ரூபாயாகவும், நான்கு முதல் ஆறு அச்சு வாகனங்களுக்கு 400- ரூபாயில் இருந்து 415-ரூபாயாகவும், ஏழு அச்சு மற்றும் அதற்கு மேல் உள்ள வாகனங்களுக்கு 490- ரூபாயில் இருந்து 505-ரூபாயாகவும் சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சுமார் 5-ரூபாய் முதல் 25-ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்று நள்ளிரவு 12மணி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.