அதிகாலை 12 மணி முதல் டோல்கேட் கட்டணம் உயர்ந்தது..!

 
1

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆண்டு தோறும் இரண்டு முறை சுங்கச்சாவடி கட்டணத்தை மாற்றி அமைத்து வருகிறது. முதன்மை சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் மாதமும், மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் இன்று திங்கள்கிழமை (ஜூன்.3) அதிகாலை 12 மணி முதல் கட்டணம் உயர்ந்தது. 


நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், 339 சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் அமைந்துள்ளன. இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, சுங்கச்சாவடி கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தகவல் வெளியானது. பின்னர் மார்ச் 30 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியானதை அடுத்து, சுங்கச்சாவடி கட்டண மாற்றம் இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் நேற்று முன்தினம் சனிக்கிழமை(ஜூன் 1) மக்களவைக்கான இறுதிக்கட்ட தேர்தல் முடிவடைந்ததையடுத்து, இன்று திங்கள்கிழமை(ஜூன் 3) அதிகாலை 12 மணி முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வந்தது. அதன்படி சுங்கச்சாவடிகளில் ஒரு முறை பயணம் செய்வதற்கான கட்டணமும், ஒரே நாளில் திரும்பி வருவதற்கான கட்டணமும் ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்த்தப்படுகிறது. மாதந்திர சுங்கச்சாவடி கட்டணமும் ரூ.100 முதல் ரூ.400 வரை உயர்த்தப்படுகிறது.


தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் 55 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், முதற்கட்டமாக கல்லகம் – கருப்பூர் நெருஞ்சாலையில் உள்ள மணகெதி, திருச்சி – கருப்பூர் நெருஞ்சாலையில் உள்ள கல்லக்குடி, வேலூர் – விழுப்புரம் நெருஞ்சாலையில் உள்ள வல்லம், இனம் கரியாந்தல், தென்னமாதேவி ஆகிய 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது.