#BREAKING பாலம் உள்வாங்கியதால் முட்லூர் சுங்கச்சாவடியில் கட்டணம் ரத்து- இன்று முதல் இலவசப் பயணம்
பாலம் உள்வாங்கியதால் முட்லூர் சுங்கச்சாவடியில் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை சிதம்பரம் வழியாக செல்கிறது. சிதம்பரம் புறவழிச் சாலையில் கொள்ளிடம் ஆற்றின் மேல் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் இணைப்புச்சாலை மற்றும் பாலம் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை செல்கிறது. இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையின் எருக்கன்காட்டுபடுகை என்ற இடத்தில் நேற்று சாலை பணி நடந்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென பாலத்தின் இணைப்புச் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 50 மீட்டர் தூரத்திற்கு, 15 அடி ஆழத்திற்கு பாலத்தின் மேல் உள்ள சாலை திடீரென உள் வாங்கியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக பாலத்தில் போக்குவரத்தை நிறுத்தினர். பின்னர் கடவாச்சேரி என்ற இடத்திலிருந்து பழைய கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தின் வழியே போக்குவரத்து மாற்றி இயக்கப்பட்டு வருகிறது. பாலம் உள்வாங்கிய இடத்திற்கு அருகே உள்ள முட்லூர் சுங்கச்சாவடியில் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் வாகன ஓட்டிகள் இலவசப் பயணம் மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

