இன்று நடக்கும் அக்னிப் பரீட்சை..! - 7,017 மனுக்களில் யாருடையது தப்பும்? யாருடையது தள்ளுபடி ஆகும்?

 
1

சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி நிலவுகிறது. அந்தந்த கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கபட்டு, தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று (ஏப்.6) ஏராளமானோர் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் ஏப்ரல் 9 ஆகும். அன்றைய தினமே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.

வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான நேற்று, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரமேலதா விஜயகாந்த், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு தாக்கல் மதியம் 3 மணிக்கு முடிவடைந்த நிலையில், தமிழகம் முழுவதும் மொத்தம் 7,017 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களில், ஆண்கள் 5,719 பேரும், பெண்கள் 1,296 பேரும், திருநங்கை 2 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக கரூரில் 108 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், குறைந்தபட்சமாக மானாமதுரையில் 6 பேர் மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளனர். வில்லிவாக்கம் தொகுதியில் திருநங்கை ஒருவரும், ராதாபுரத்தில் திருநங்கை ஒருவரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னையை பொறுத்தவரையில் 543 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இவர்களில், ஆண்கள் 472 பேர், பெண்கள் 70 பேர், திருநங்கை ஒருவர். சென்னையில் அதிகபட்சமாக, பெரம்பூரில் 63 பேரும், குறைந்தபட்சமாக வில்லிவாக்கத்தில் 17 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்கள் இன்று (ஏப்.7) பரிசீலனை செய்யப்பட உள்ளன. இதில் வேட்பாளர்களின் ஆவணங்கள், தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதி உள்ளவர்கள் மட்டுமே இறுதி வேட்பாளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள்.