நகை வாங்க சரியான நாள் இன்று! 3 நாள்களில் ரூ.2,320 குறைந்த தங்கம் விலை..!!

 
Gold

இந்தியாவில் அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வரவுள்ள நிலையில் தங்கம் விலை குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஆனால் இந்த விலை குறைவு தொடருமா என்பது கேள்விக்குறி தான். ஏனென்றால், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் நகைகளை சேமிப்பு கருதி அதிகளவில் வாங்கி வருகின்றன.

 

குறிப்பாக, தங்கம் அதிகம் கையிருப்பு கொண்ட நாடுகளில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் சீனா, அளவுக்கு அதிகமாக தங்கத்தை வாங்கி குவித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2026ஆம் ஆண்டு செப்டம்பரில் மட்டும் 23 டன் தங்கம் வாங்கியிருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 103 டன் தங்கம் வாங்கியிருக்கிறது. இதன் மூலம் சீனாவின் மொத்த தங்கம் கையிருப்பு 2,410 டன்னாக அதிகரித்திருக்கிறது.

 

குறிப்பாக, பிரான்ஸ், இத்தாலியை பின்னுக்கு தள்ளி, விரைவில் மூன்றாம் இடத்தை பிடிக்க வாய்ப்பிருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. எனினும், தற்போதைய நிலவரப்படி, அதிகபடியான தங்கம் கையிருப்பு நாடுகளில் 8,133 டன் கையிருப்புடன் அமெரிக்கா முதலிடமும், 3,350 டன் கையிருப்புடன் ஜெர்மனி 2ஆம் இடமும், 2,452 டன் கையிருப்புடன் இத்தாலி 3ஆம் இடமும், 2,437 டன் கையிருப்புடன் பிரான்ஸ் 4ஆம் இடமும் வகிக்கிறது.

உலக நாடுகள் மத்திய வங்கி தங்கம் கையிருப்பு பட்டியலில் இந்தியா 880 டன் தங்கம் கையிருப்புடன் 8வது இடத்தில் இருக்கிறது. எனினும், பொதுமக்களிடையே தங்கம் அதிகம் புழங்குற நாடுகளில் நமது நாடு முன்னிலை வகிக்கிறது.

நேற்று (அக்டோபர் 13) 1 கிராம் தங்கம் ரூ.35 குறைந்து, ரூ.13,685-க்கும், ஒரு சவரன் ரூ.280 குறைந்து ரூ.1,09,480-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை 1 கிராம் நேற்றும் மாற்றமின்றி ரூ.245-க்கு விற்பனையானது.

இன்று (அக்டோபர் 14) தங்கத்தின் விலை மளமளவென சரிந்துள்ளது. 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.95 குறைந்து ரூ.13,590-க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.760 குறைந்து, ரூ.1,08,720-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனையாகிறது.

கடந்த 3 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.2,320 குறைந்துள்ளது