அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.. பி.காம் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்..

 
அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.. பி.காம் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்..

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். இந்த ஆண்டும் பி.காம் படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்,  இளநிலை படிப்புகளுக்கு  1 லட்சத்து 7ஆயிரத்து 395 இடங்கள் உள்ளன. இளநிலை முதலாமாண்டு பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த  மே 8ம் தேதி  தொடங்கியது. ஏராளமான மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்துள்ளனர். அதன்படி,  நேற்று வரை  2 லட்சத்து 48 ஆயிரத்து 510 மாணவர்கள் விண்னப்பப் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 104 பேர் கட்டணம் செலுத்தி உள்ளதாகவும் கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

கல்லூரி மாணவர்கள்

குறிப்பாக, இந்த ஆண்டு பி.காம் படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  பி.காம் படிப்பில் சென்னை மாநிலக் கல்லூரியில்  உள்ள 40 இடங்களில் சேர்வதற்கு 6,200 மாணவர்களும், ராணிமேரி  கல்லூரியில் உள்ள 60 இடங்களில் சேர்வதற்கு 4,500 மாணவிகளும், பிகாம் சிஏ படிப்பில் சேர்வதற்கு கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள 60 இடங்களுக்கு 3,400 பேரும் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.  இதேபோல், வியாசர்பாடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்   உள்ள 70 இடங்களுக்கு 3,478 மாணவர்களும், பாரதி பெண்கள் கல்லூரியில் உள்ள 140 இடங்களுக்கு 3,421 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக  கம்ப்யூட்டர் அறிவியல் பாடப்பிரிவில் சேர்வதற்கும், பிஎஸ்சி வேதியியல் பாடப்பிரிவில் சேர்வதற்கும் அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.  மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழ் மொழி பட்டப்படிப்பு, தமிழ் மொழியில் பயின்றவர்களுக்காக தனியாக தரவரிசை பட்டியலும், ஆங்கில மொழி பட்டப்படிப்புகளுக்கு ஆங்கிலத்தில் பெற்ற மதிப்பெண்களும், பிற இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மற்ற நான்கு பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்லூரி மாணவர்கள்

மேலும் மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கு  விண்ணப்பம் செய்வது முதல் சேர்க்கை பெறுவது வரையிலும் ஏற்படும் சந்தேகங்களை தீர்த்து வைக்கவும் வழிகாட்டி மையமும் அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரியல் மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிட்டப் பின்னர், ஒவ்வொரு பாடப்பிரிவிலும் மாணவர்கள் சேர்க்கைக்கான குழுவை அமைத்து , தரவரிசைப்படி சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. விண்ணப்பிக்க இன்று  கடைசி நாள் என்பதால் மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

மாணவர்கள்   http://www.tngasa.in/ எனும் இணையதளம் வழியாக விரைவில்  விண்ணப்பிக்க வேண்டும் எனவும், விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் மே 23-ம் தேதிக்குள் கல்லூரிகளுக்கு அனுப்பப்படும் என்றும் கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.  அதன்பின் சேர்க்கை கலந்தாய்வு (கல்லூரி அளவில்) மே 25 முதல் ஜூன் 20-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெறும்  என்றும்,  தொடர்ந்து முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22-ம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.