இன்று தான் கடைசி நாள் : இன்று ஆதார்-பான் இணைக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?

 
1 1

ஆதார்-பான் இணைக்காவிட்டால் என்ன நடக்கும்:

2025 டிசம்பர் 31க்குள் இணைக்கத் தவறினால், பான் கார்டு செயலற்றதாகிவிடும். இதனால் வருமான வரித் தாக்கல், வங்கி மற்றும் டிமேட் கணக்குகள் திறப்பது, அதிக தொகைக்கு பொருட்களை வாங்குவது, வரி ரீபண்ட் பெறுவது போன்ற நிதிப் பரிவர்த்தனைகளை செய்ய முடியாது. செயலற்ற பான் அட்டை வைத்திருக்கும் நபர்கள் டெபிட், கிரெடிட் கார்டுகள் பெற முடியாது, ஒரு நாளுக்கு ரூ.50,000-க்குக் குறைவான வங்கி டெபாசிட்கள் மட்டுமே செய்ய முடியும், ரூ.10,000-க்கு அதிகமான வங்கி பரிவர்த்தனைகளை செய்ய தடை விதிக்கப்படும். பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது, அரசு மானியங்கள் பெறுவது, வங்கிக் கணக்குத் திறப்பது போன்ற அரசு சேவைகளும் கிடைக்காமல் போகும்.

பான்-ஆதார் இணைப்பு இல்லாதோர் புதிய பான் கார்டை பெறுவதிலும் சிக்கல் உள்ளது. பழைய அட்டை சேதமடைந்தாலோ அல்லது தொலைந்துவிட்டாலோ இது மேலும் தீவிரமடையும். ஏனெனில், புதிய பான் விண்ணப்பத்திற்கு ஆதார் எண் கட்டாயம்.

 

பான்-ஆதார் இணைப்பை ஆன்லைனில் எளிதாக செய்வது எப்படி..?

முதலில், வருமான வரி துறையின் ஈபைலிங் இணையதளத்திற்கு (e-filing portal) சென்று சரியான பயனர் தகவல்களுடன் உள்நுழையவும். பதிவு செய்யாதவர்கள் புதிதாக பதிவு செய்துவிட்டு, உள்நுழைந்த பிறகு 'My Profile'-ல் உள்ள 'Personal Details' கீழ் இருக்கும் 'Link Aadhaar' விருப்பத்தை கிளிக் செய்யவும்.

உங்கள் பான் மற்றும் ஆதார் எண்களை உள்ளிட்டு, 'e-pay tax மூலம் செலுத்த தொடரவும்' என்பதைத் தேர்ந்தெடுத்து முன்னோக்கிச் செல்லவும். அங்கு பொருத்தமான மதிப்பீட்டு ஆண்டு (assessment year) மற்றும் பணம் செலுத்தும் வகையாக 'Other Receipts' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

நீங்கள் செலுத்த வேண்டிய தொகை தானாகவே நிரப்பப்பட்டிருக்கும்; 'continue' கிளிக் செய்யவும்.

இதை தொடர்ந்து ஒரு சலான் (challan) உருவாக்கப்படும். பணம் செலுத்தும் முறையைத் தேர்ந்தெடுத்து, வங்கி இணையதளத்தில் பணத்தைச் செலுத்தவும்.

பணம் செலுத்திய பின் தானாக ஈபைலிங் இணையதளத்தில் பான்-ஆதார் இணைப்பை முடியும்.