குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்..

 
TNPSC


டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2-ஏ தேர்வுக்கு இன்று இரவு வரை விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.  

தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தகுதித்தேர்வுகள் நடத்தப்பட்டு நிரப்பப்படுகிறது. குரூப் 1 முதல் குரூப் 8 வரை ஒவ்வொரு படிநிலைகளுக்கு ஏற்ப பல்வேறு தேர்வுகள் மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அந்தவகையில் நடப்பாண்டு ( 2024) காலியாக உள்ள உதவி ஆய்வாளர், துணை வணிகவரி அலுவலர், வனவர் உள்ளிட்ட 507 காலிப்பணியிடங்களை கொண்ட குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்பையும், அதேபோல உதவியாளர், நேர்முக உதவியாளர், கணக்கர் உள்ளிட்ட  சுமார் 1820 காலி பணியிடங்கள் கொண்ட  குரூப்  2 ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பையும் கடந்த ஜூன் 20ம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.  

tnpsc

மொத்தமாக 2,327 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான முதல் நிலை போட்டித்தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி வெள்ளிக்கிழமையான நேற்று ( ஜூன் 19) என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கடைசி நாளான நேற்று ஏராளமானோர் விண்ணப்பிக்க முயன்ற நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியாமல் போனது.  இதனையடுத்து தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கவும், விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும் இன்று ( 20.07.24) இரவு 11.59 வரை கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. 

​tnpsc ​

 தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in-ல் விண்ணப்பிக்கலாம். இதேபோல் தேர்வுக்கு விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களது விண்ணப்பங்களில் திருத்தங்கள் செய்ய 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  இந்த வாய்ப்பினை பயன்படுத்தி இதுவரை விண்ணப்பிக்காத தேர்வர்கள் இன்று இரவுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.